பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1269

 

திறத்தினிற் செலுத்திய ஆளுடையபிள்ளையார், திருநீறுகொண்டே தொடங்கி
அச்செயல் செய்தருளினர் என்ற வரலாறும், இச்சரிதத்திலே பின்னர்ச், சமண்
போய்ச் சைவமோங்குதற் கடையாளமாக மூர்த்தியாரும் திருநீற்றினையே
அபிடேகமாகக் கொண்ட வரலாறும் காண்க. நீற்றினை வெளிப்படக் காணும்
நிலையின்றியும் சிவனடிமைத்திறம் பேணுநிலை உளதாம் என்பது
சாக்கியநாயனார் புராணத்திற் காணப்படுவதனால் நீற்றிற் செல்லாது
என்னாது நீற்றின் சார்வு செல்லாது
என்றார்.

     அருகந்தர் திறம் - அருகர் சமயம். அருகன் - சமணசமயக்
கடவுள். அவனைத் தெய்வமாக் கொள்வோர் அருகந்தர். சிந்தை
தாழ்ந்தான்
- தாழ்தல் - விரும்புதல். நீற்றுச் சார்பினிற் சென்று வாழாமல்
கீழ்நிலைமையில் தாழ்ந்தான் என்றோருண்மைப் பொருள்படவு நின்றது.
வரும்பாட்டில் தாழும் - வீழும் என்பதும் காண்க. சைவர் என்போரில்
நீற்றின் சார்வு செல்லாது தாழ்வோரும் பலர் காணப்படுவது இக்காலத்துக்
கொடுமைகளுள் ஒன்று!

     வளம்படுத்தி - என்பதும் பாடம்.                   13

981.



தாழுஞ்சமண் கையர்த வத்தைமெய் யென்று சார்ந்து
வீழுங்கொடி யோனது வன்றியும் வெய்ய முன்னைச்
சூழும்வினை யாலர வஞ்சுடர்த் திங்க ளோடும்
வாழுஞ்சடை யானடி யாரையும் வன்மை செய்வான், 14
982.



செக்கர்ச்சடை யார்விடை யார்திரு வால வாயுள்
முக்கட்பர னார்திருத் தொண்டரை, மூர்த்தி யாரை,
மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண்பேர்
எக்கர்க்குட னாக விகழ்ந்தன செய்ய வெண்ணி,    15
983.



அந்தம்மில வாமிறை செய்யவு மன்ப னார்தாம்
முந்தைதம்முறை மைப்பணி முட்டலர் செய்து வந்தார்;
தந்தம்பெரு மைக்கள வாகிய சார்பி னிற்கும்
எந்தம்பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்?     16

     981. (இ-ள்.) வெளிப்படை. தாழும் சமணர்களாகிய வஞ்சகர்
களுடைய பொய்த் தவங்களை மெய்யென்று கொண்டு அந்நெறியிற் சார்ந்து
வீழும் கொடியவனாகிய அம்மன்னவன் தான் வீழ்ந்ததுவேயுமல்லாமல்,
அரவம் சந்திரனோடும் வாழ்தற்கிடமாகிய சடையினையுடைய
சிவபெருமானது அடியார்களையும், கொடிதாகிய முன்னைச் சூழ்வினைப்
பயத்தினாலே, வலிமை செய்வானாகி, 14

     982. (இ-ள்.) வெளிப்படை. செவ்வானம் போலும் சடையவரும்
விடையவரும், திருவாலவாயினுள் எழுந்தருளிய மூன்று கண்ணுடைய
பரமனாரும் ஆகிய சிவபெருமானது திருத்தொண்டரை, மூர்த்தியாரை,
அந்தக்கரிய கல்போன்ற நெஞ்சுடைய வஞ்சகன் வெவ்விய சமண் என்ற
பேர் கொண்ட ஈனர்களுக்கு உடன்படுத்துவானாகி, இகழ்ச்சியான
காரியங்களைச் செய்ய எண்ணி, 15

     983. (இ-ள்.) வெளிப்படை. முடிவில்லாதனவாகிய
கொடுமைகளைச்செய்யவும், அன்பனார், தாம் செய்துவந்த முன்னை
முறைமையாகிய சந்தனத்திருப்பணியை வழுவாமற் செய்து வந்தனர்;
தங்கள் தங்கள் பெருமைக்களவாகிய சார்பிலே ஒழுகி நிற்கின்ற எந்தமது
பெருமக்களை அவர்களது நல்லொழுக்கத்தினிற் செல்லாமல் தடுக்க
வல்லவர் யாவர்? 16