பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1279

 

     990. (வி-ரை.) எழுந்தது - எழுந்ததனை. எழுந்த இறைவனது
திருவாக்கினை. அஞ்சி - ஐய! இது செய்திடல் என்று இறைவர் விலக்கும்
இச்செயலினைச் செய்தேனே என்ற எண்ணம் தோன்றவே அச்சம் வந்தது
என்க.

     முன்பு செய்வண்ணம் - திருவாக்குக் கேட்பதற்கு முன்பு செய்த,
முழங்கையைப் பாறையில் தேய்த்த செயல்.

     தேய்ந்த ... கைவண்ணம் நிரம்பின - தேய்ந்த புண் -
புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேயத் (987) தேய்த்ததனால் தேய்ந்து
உண்டாகிய புண். புண் ஊறு - புண்ணின் உற்றதாகிய மாறுபாடு என்னும்
வடு. ஊறு - உறு என்னும் பகுதி முதல் நீண்டு வந்த தொழிலாகுபெயர்.
தீர்ந்து - மறைந்து. புண் - உடம்பின் மேற்போர்வையாகக் கட்டிய
தோலினது தொடர்ச்சி அறுபடுதலே புண் எனப்படும். "கட்டும் புறந்தோல் ...
கரைந்து தேய" (987) என்றது காண்க. (Breach of the continuity of the cutaneous membrane - என்பர் நவீனர்). "தோலிடைப் புகவிட்டுப்
பொதிந்த புண்" (திருவிடை - மும் - கோவை - 13) என்றது காண்க.

     கைவண்ணம் நிரம்பின - கையினது முன்னை வண்ணம் எல்லாம்
நிரம்பியன என்றதாம். கையினது முன்னை உருட்சி, திரட்சி, அழகு, வலிமை
என்ற எல்லாத் தன்மைகளும் குறிக்க வண்ணம் என்றார். சாதியொருமை.
நிரம்பின என்று பன்மை வினை முடிபுகொண்டதும் இக்கருத்துப் பற்றியது.

     வாசமெல்லாம் ...... எய்தினர் - சிவன்பணி செய்வார்கள் தாம்
தாம் செய்யும் திருப்பணிக்கீடாகிய உரிய பதங்களை அடைகுவர் என்பது
சாத்திரம். "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்"
என்ற அப்பர் சுவாமிகளது திருவாக்கும், அதற்கிலக்கியமாகத், திருவிளக்குப்
பணிசெய்தநமிநந்தியடிகள், "பாத நீழல்மிகும் வளர்பொற்சோதி மன்னினார்"
என்றவரலாறும் இங்கு நினைவு கூரத் தக்கன. வாசம்கமழும் சந்தனக்
காப்புக்கொண்டு மெய்ப்பூச்சிட்ட திருப்பணியாதலின் இங்கு மூர்த்தியார்
அதற்கேற்ப "வாசமெல்லாங் கலந்து ... ஒளி எய்தினர்" என்க.
வாசம்எய்தினார் - என்பது மனித உடம்புக்குரிய புலால் கமழும் தன்மை
நீங்கித் தெய்வமணங் கமழுதல் குறித்தது. இறைவர் சாத்தும்
சந்தனத்துக்குரிய குறட்டினுக்கு ஈடான பொருளாகக்கொண்டு கையினைத்
தேய்க்கப்பட்டதனை அவ்வாறே இறைவரும் ஏற்றுக்கொண்டருளியதனாலும்
(அந்தச் சந்தனத்தின்) "வாசமெல்லாங் கலந்தது" என்றலுமாம்.

     சிவபெருமானது திருமேனியில் சருகுவிழாமற் காக்க எண்ணித்
தன்வாயின் நூலாற் சித்திரப்பந்தரிழைத்த சிலந்தியை, அதன் குடையின்கீழ்
உலகம் தங்குமாறு அரசனாக்கிய தொடர்பும் இங்குக் கருதத்தக்கது.

     மொய் வண்ணம் விளங்கு ஒளி - மொய்த்தல் - நெருங்கிக்
கூடுதல் - கூர்தல். வண்ணம் - அழகு. ஒளி - ஞானத்தினுக்கு
உரிமையுடைய சிவத்துவ விளக்கமாகிய ஒளி. சிவன் தாளினையே
மெய்ப்பற்றெனப் பற்றிக்கொண்டு (975), கேளும் துணையும் அதனையல்ல
தில்லாதாராகி முழுத்துறவுபூண்ட மூர்த்தியாராதலின் ஞான வொளி
மிக்கதென்பதாம். 23

991.



அந்நாளிர வின்க ணமண்புகல் சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு நாடர் மன்னன்
தன்னாளு முடிந்தது, சங்கரன் சார்பி லோர்க்கு
மின்னாமென நீடிய மெய்ந்நிலை யாமை வெல்ல. 24

     (இ-ள்.) மின் ஆம் என நீடியமெய் - மின்னல் காணப்படும்
சிறுகால அளவே நீண்டிருப்பதாகிய யாக்கை; சங்கரன்சார்வு இலோர்க்கு -
சிவபெருமானது சார்வு பெறாதவர்களுக்கு; நிலையாமை - அந்த
அளவுதானும் நிலைக்காதாகும் என்ற உண்மையினையும்; வெல்ல -
மேற்பட்டு விளங்க; அமண்புகல் ... நாளும் -