பூசையும் செய்தருளினர்.
உலகுயிர்களின் பொருட்டே இறைவரிடத்து மூன்று
பெருவரங்கள் கேட்டுப் பெற்று அறங்களை வளர்த்து வருவாராயினர். இவை
அம்மையாரின் பெருங்கருணை யியல்பாம். (1126-1147)
13.
சிவபூசையானது எல்லா மக்களும், என்றும் முடிவில்லாது, அறிவும்
ஆற்றலும் ஆயுளும் உள்ள அளவும் நித்தியமாய்ச் செய்துவரக்
கடவதொன்று. இவ்வாறு தவறாது பூசை கொண்டருளும்படி இறைவரிடம்
வரம் வேண்டிப் பெறுவது அறிவுடையோர் செயல். (1145-1146)
14.
காமாட்சியம்மையார் தழுவக், கம்பர் குழைந்தமையால் உலகில்
உள்ள எல்லா உயிர்களும் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி, அன்பு
நெறிப்பட்டு வாழ்கின்றன. இது எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள்
சிவபெருமானே என்பதனை விளக்கும் உண்மையாகும். (1142)
15.
திருவடிப் பிழைத்தல், கழுவாயில்லாத பெரும்பாவம். அதனைச்
செய்ய மணத்தால் நினைத்தலும் பாதகமாம். (1146)
16.
கம்பர் காமாட்சியம்மையாருக்கு அளித்த உணவின் மூலமாகிய
இரு நாழி நெல், உலகுயிர்க்கெல்லாம் அறம் வளர்க்கும் வித்தாக ஓங்கி
உலகங் காத்து இகபர சாதனங்களை அளித்து வருகின்றது. (1147)
17.
புண்ணியத் திருக்காமக் கோட்டத்தி னெல்லையுள் இன்றும்
காணநிற்கும் திசைமயக்கம் முதலிய பல அற்புதங்களையும், விம்மிதமாகிய
மரங்கள் தீர்த்தங்கள் முதலியவற்றையும் கண்டு நல்வழிப்பட்டுப் பேறுபெற
முயலுதல் அறிவுடை மக்களின் கடமை. (1151-1157)
18.
தெய்வங்களாற் காவல் செய்யப்படும் சிறப்பு ஒரு நகரின்
பெருமைக்கு ஏதுவாகும்.(1158-1159)
19.
உயிர்களின் பொருட்டு உலகத்தாயாகிய காமாட்சியம்மையார்
அறம் வளர்த்தும், தவமும் பூசையும் புரிந்தும் திருக்காமக் கோட்டத்தில்
காமபீடத்தில் நித்தியமாக எழுந்தருளியிருக்கும் கருணைத்திறனைக் கண்டு
வழிபட்டு உய்வது அறிவுடைய மாந்தர் கடன். (1148)
20.
பழஞ்சரிதப் பெருமையும், மன்னவர்வழிப் பெருமையும்
பெற்றுடையது பெருநகரச் சிறப்புக்களுள் ஒன்றாகும் (1162)
21.
பெரியோர் உள்ளங்கள் ஓங்கு நிலைத்தன்மை பெற்றுச்
சிவனருளிய நல்லொழுக்கமல்லாது தீங்கு நெறியடையாத தடையுமாகி
விளங்குவன. மக்களின் மனைவாயில்களும் நகரமதில் வாயில்களும்
அவ்வாறே நிற்றல் அமைவுடைத்து. (1165)
22.
அந்திச் செக்கர்வானத்தையும் பிறைமதியினையும் கண்டபோது
சிவபெருமான் திருச்சடையையும் அதில் வாழ்ந்தோங்கும் வளரிளம்
பிறையையும் மனத்துக் கண்டு உருகிக் கும்பிட்டு அன்புருகிக் கண்ணீர்
வாரநிற்பது அன்புடையோர் தன்மை. இவ்வாறே சராசரங்களையும் காலத்
திக்கு முதலியவற்றையும் சிவனுருவமாகவே காண்பது உண்மையன்பின்
தன்மை. "காலையே போன்றிலங்குமேனி" என்ற அற்புதத் திருவந்தாதியில்
காரைக்காலம்மையார் விளக்கியருளிய இவ் வுண்மைநெறியினில் மனத்தினைப்
பண்படுத்துவது அறிவுடையோர் கடன். (1169)
23.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நாற்குலத்தோரும்,
இவர்களுள் ஒவ்வாப்புணர்ப்பில் வந்த குலபேதத்தோரும் எல்லாம் அவ்வவர்
தந்தகைமைக்கேற்ற தனியிடங்கள் மேவித் தத்தந் தொழின்முறைமை வழாது
பயின்று வளமுற வாழ்ந்திருத்தல் சிறந்த நகர அமைப்பின் இயல்பாகும்.
இச்சிறப்புக் காஞ்சிமாநகரத்திற்குள்ளது. (1180)
24.
வீதிகளில் என்றும் விழாக்களின் அணி மலிந்து விளங்குவது
பெருநகரின் சிறப்பு. (1181)
|