பக்கம் எண் :


1628 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     1265. (இ-ள்.) வெளிப்படை. விடம்பொருந்திய அழகிய
கண்டத்தையுடைய இறைவனாரது அடியார்களது பெருமையினை,
அன்புநிறைந்த வுள்ளத்தினாலே, எல்லாவுயிர்களும் அறிந்து தொழுதேத்தத்
தேசமெல்லாம் உய்யும்படி திருத்தொண்டத்தொகையினால் முன்
அருளிச்செய்த திருவாளராகிய ஆளுடைய நம்பிகளது வாசம் பொருந்திய
மலர்போன்ற மெல்லிய பாதங்களை வணங்குதற்குப் பேறு கிடைக்கப்பெற்ற
இந்தப் பிறவியினை வணங்குவோம்.

     (வி-ரை.) நேச நிறைந்த உள்ளம் - "இவர்க்குயா னடியே னாகப்,
பண்ணுநாளெந்நா ளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்" (335), "அடியவர்க்
கடியனாவே னென்னுமா தரவு கூர" (336), "அவர்தாம் வேண்டு மதனையே"
(341) என்றவை காண்க.

     நீலம் - நீலநிறமுடைய விடத்துக்காயிற்று. பண்பாகுபெயர். “நீலவாள்"
என்றது (1092 - சில குறிப்புக்கள்; பக்கம் - 1541) பார்க்க. ஈசன் அடியார்
பெருமையினை - ஈசன் பெருமையினையும் அடியார் பெருமையினையும்
என்றுரைக்கவும் நின்றது. "தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்"
என்ற தொகுதியினுள் இறைவரும் ஒருவராதலும் காண்க. 350 - 351 பார்க்க.
அடியார் பெருமை கூறவே அதனுடன் அவர்களை ஆண்ட இறைவர்
பெருமையும் உடன்கூற வருதலும் கருதத்தக்கது. எல்லாவுயிரும் தொழ
என்பது நம்பிகள் பணித்துச்செய்த பேரருளின் பொருட்டு அவரை உயிர்கள்
தொழஎனவும், தேசமுய்ய என்பது, நம்பிகள் திருவுள்ளத்தில் உலக
முய்யும்படி கருதியருளிப் பணித்தது எனவும் கொள்க. நேச நிறைந்த
என்றதனால் உலகுயிர்களின்மேல் வைத்த கருணையும் குறிப்பால்
உணர்த்தப்படுதல் காண்க. "மாத லஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்,
தீதிலாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்" (35) என்றபடி
பெருமையினை அறிந்து வழிபட்டு உலகமுய்யும் பொருட்டுத் திருத்தொண்டத்
தொகையினை அருள்வதற்காகவே நம்பிகள் அவதரிக்கத் திருவருள் கூடிற்று
என்பதறியப்படுதலும் இங்குக் கருதுக. முன் பணித்த - முன் - உலகுயிர்கள்
அறியும்படி தேற்றமாக என்க. முன்னாளில் என்றலுமாம். பணித்தல் -
கட்டளையிட்டு - ஆணையிட்டு - அருளுதல். வழிகாட்டுதல் என்ற
பொருளில் வந்தது. "ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரி லம்மானுக்
கன்பரா வாரே " என்றதன் கருத்தும் காண்க. திருவாளன் -
சிவசம்பந்தமாகிய திருவை ஆள்பவர் - உடையவர். "உயிரளித்த
திருவாளன்" (வெள். சருக் - 12) என்பதும் கருதுக. அடியார் பெருமையினை
உலகுக்கு அறிவித்து வழிப்படுத்தும் தமது திரு - (முத்தித்திரு) என்ற
செயலை இவர்பாலதாகப் பணித்து இறைவர் அருள்செய்தாராதலின்
இப்பெயராற் கூறினார். கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் - பிறவி
தீது என்பர் பிறர் எல்லாம்; ஆயின் நம்பிகளது கழல்களை வணங்கும் பேறு
கிடைப்பதாயின் அப்பிறவி பிணங்கத்தக்க தீதல்லாது வணங்கத்தக்க
பொருளுமாகும் என்பது கருத்து. "மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த
மாநிலத்தே" என்ற திருவாக்கின் கருத்தினையும் இங்கு வைத்துக் காண்க.

மும்மையாலுலகாண்ட சருக்கம்
முற்றிற்று