பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்775

 
610.
தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டி
னன்மைக்க ணின்ற நலமென்றுங் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடிவாட் படைபயிற்றுந்
தன்மைத் தொழில்விஞ்சை யிற்றலைமை
                            சார்ந்துள்ளார்.
3

     (இ-ள்.) வெளிப்படை, (அவர்) பழைமையாகிய திருநீற்றுத்
தொண்டினை வழிபடும் திறத்தின் நன்மையிலே நிலைத்து நின்ற தன்மையின்
என்றும் வழுவாதவர்; அரசர்க்கு வெற்றிதரும் வாட்படை பயிற்றும்
தொழிலாகிய வித்தைத் திறத்திலே தலைமை பெற்றுள்ளார்.

     (வி-ரை.) தொன்மைத் திருநீறு - முன்னைப் பழம் பொருட்கு
முன்னைப் பழம் பொருளாயுள்ளது திருநீறு - வேதத்தினுள்ளது -
என்றுமுள்ளது - பராசத்தியின் ரூபமாயுள்ளது (பராவணமாவது நீறு)
என்பனவாதி பொருள்பற்றித் தொன்மை என்றார்.

     திருநீற்றுத் தொண்டு - நீறு - "எரியலா லுருவமில்"லா னாகிய
இறைவன் தன்மையடைந்த உயிர்களின் பாசங்களை அரித்தலின் அரன்
எனப்படுதல் போல, அவ்வெரியின் விளைவாய்த் தன்னை அணிந்தாரது
பாவங்களை நீற்றுதலால் நீறு எனப்படும் பயிலப்படுவது நீறு பாவ மறுப்பது
நீறு" - தேவாரம். நீறு பூசிய திருவேடத்துடன் தொண்டு செய்வோர்
நீற்றுத்தொண்டு எனப்பட்டார்.

     தொண்டின் வழிபாடு - நீறணிந்த தொண்டர்களை வழிபடுதல்.
தொண்டர் மேனி மேலணிந்த திருநீறுகண்டபோது, மங்கையரது
இளங்கொங்கையிற் செங்குங்குமம் கண்ட இளைஞர் மனம் அதன் வசப்பட்டு
அதனால் ஈர்க்கப்படுதல போல, மனமுருகி வசீகரிக்கப்பட்டு அவர் ஏவின
செய்து அவர்வழி நிற்றல். அவர் வழியிலே படுதல் வழிபாடு எனப்பட்டது.
"வெண்டிரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன்" (ஆதலின்) இவர்தங்
கொள்கைக் குறிவழி நிற்பேன்
(645) என்றது இவர்தஞ் சரிதக் குறிப்பு.

     வழிபாட்டின் நன்மைக் கண் - வழிபாடாகிய இனிய நன்மையிலே.

     நலம் - தன்மை. என்றும் குன்றாதார் - என்றும் - எக்காலத்தும்.
அதனால் தம்முயிர் போக நேர்வதைத் தாம் அறிந்த அக்காலத்தும் என்ற
பிற்சரிதக் குறிப்புக்காட்ட என்றும் என்றார். குன்றாமை -
அத்தன்மையினின்றும் வழுவாதிருத்தல்.

     வென்றி...விஞ்சை - வெற்றிதருவதாகிய வாட் படைக்கலப் பயிற்சி
செய்விக்கும் வித்தை. வாள்பிடித்து நெருக்கிப் போர்செய்து வெற்றி பெறுவது
அந்நாள் வீரப்போர்; நெடுந்தூரம் மறைந்து நின்று, இவர், பாலர், முதுவர்,
பிணியாளர் எனவும், இவர் வேறு இன்னார் எனவும் ஒன்று மறியாதேயும்
பெரும் போர்க்கருவிகளாகிய பொறிகளின் அனல் தூவி மக்களைப்
பெருவாரியாக நாசம்செய்து பொருட்பே றொன்றோ சுருதிப் போர்செய்வதே
மரபாகும் இந்நாட் பேடிப்போருடன் இதனை ஒப்புநோக்கி உலகம்
உணர்த்துவதாக.

     வடிவாள் - சிறப்புவகையால் நஞ்சு முதலிய ஊட்டியும்
வடித்தெடுத்துக் கூர்மையும் பதமும் ஆக்கப்பட்ட வாள்.

     பயிற்றுந் தன்மைத் தொழில் - அரசரை வாள் பயிற்றுவிக்குந்
தன்மையுடைய ஆசிரியத் தொழில். பயிற்றி அதனால் வரும் ஊதியமாகிய
வளத்தையே தமது உணவுரிமைத் தொழிலாகக் கொண்டவர் என்பது. "செய்
தொழிலா மாசிரியத் தன்மைவளம்" (614) என்றதினாலும் காண்க.

     விஞ்சையிற்றலைமை - வித்தையிற் பிறர் எவரும் இணையின்றிச்
சிறந்து நிற்றல்.

     (ஏனாதிநாதனாராகிய) அவர் - குன்றாதார் - சார்ந்துள்ளார் என
எழுவாய் தொக்கது. வரும்பாட்டிலும் இவ்வாறே அவர் ஆக்குவார் என
முடிந்தது.