பக்கம் எண் :

 123. திருவலிவலம்1141


123. திருவலிவலம்

பதிக வரலாறு:

திருவாரூரை யடைந்த பிள்ளையார் புற்றிடங்கொண்ட புனிதரை வழிபட்டு, பற்றும் அன்பொடு பணிந்து இசைப்பதிகங்கள் பாடி, அடியார் கூட்டத்தோடும் அங்கிருந்தும் புறப்பட்டு, வளம்நிறைந்த வலிவலத்தை யடைந்து, மனத்துணை நாதரை வழிபட்டனர். ‘பூவியல் புரிகுழல்‘ என்னும் இப்பதிகத்தை யருளிச் செய்தனர்.

திருவிராகம்

பண்: வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 123

திருச்சிற்றம்பலம்

1326. பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1

_________________________________________________

1. பொ-ரை: மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண்ணும் வண்டுகளையும், உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட்டப்பெற்ற வில்போன்ற நுதலையும், செலுத்துதற்கு உரிய கணை, மான் ஆகியன போன்ற கண்களையும் பெற்றுடைய உமையம்மை யோடு கூடிய திருமேனியை உடையவன்.

கு-ரை: உமாதேவி விரும்பி எழுந்தருளிய திருமேனியுடையவன், வலிவலம் உறை இறைவன் ஆவான் என்கின்றது. பூ இயல் புரிகுழல் - பூக்களையணிந்த பின்னப்பெற்ற கூந்தலையும், வரிசிலை நிகர்நுதல் - கட்டுக்களோடு கூடிய வில்லை யொத்த நெற்றியையும் உடைய உமையவள் எனத் தனித்தனிகொண்டு இயைக்க. ஏவு இயல் கணை - செலுத்தப்பெற்ற பாணம். இதனைக்கண்ணுக்கு ஒப்பாக்கியது சென்று தைத்திடும் இயல்பு பற்றி. பிணை - பெண்மான்நோக்கு. ஆகுபெயர்; இதனைக் கூறியது மருட்சிபற்றி. மா இயல் பொழில் - மாமரங்கள் செறிந்த சோலை. வண்டு நிறைந்த சோலையுமாம்.