பக்கம் எண் :

 29. திருநறையூர்ச்சித்தீச்சரம்493


29.திருநறையூர்ச்சித்தீச்சரம்

பதிக வரலாறு:

குடவாயிலை வணங்கிப் பதிகம் பாடிய பிள்ளையார் ‘ஊருலாவு‘ என்னும் நீடுதமிழ்த்தொடை புனைந்துகொண்டே வழிநடந்து திருநறையூரை யடைந்தார்கள். இதில் நறையூர் என்பது தலத்தின் பெயராகவும், சித்தீச்சரம் என்பது கோயிலின் பெயராகவும் குறிக்கப்பெறுகிறது. ‘சித்தன் சித்தீச்சரம்’ என இறைவன் திருநாமம் சித்தன் எனக் குறிக்கப்பெறுகிறது.

பண் : தக்கராகம்

பதிக எண்: 29

திருச்சிற்றம்பலம்

305. ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரில்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1

__________________________________________________

இத்திருப்பதிகம் தம் நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

1. பொ-ரை: நெஞ்சே! ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று, உலகம் பரவக் கங்கை நீரைத் தன் திரு முடியில் ஏற்று, அக்கங்கை நீர் உலாவும் மேல்நோக்கின சிவந்த சடைமுடியினை உடையதலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய, சீருடைய மறையவர் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.

கு-ரை: இப்பதிகம் நெஞ்சை நோக்கிச் சித்தீச்சரம் சென்றடை: சிந்தி; தெளி; என்று அறிவுறுத்தியது.

ஊர் உலாவு பலிகொண்டு - ஊரின்கண் உலாவுதலைச் செய்து பிச்சையேற்று. உலாவு என்பது முதனிலைத் தொழிற்பெயர். தலப்பெயர் நறையூர்; கோயிற்பெயர் சித்தீச்சரம்.