பக்கம் எண் :

534திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


36. திருவையாறு

பதிக வரலாறு:

திருப்பூந்துருத்தியை வணங்கிப் பதிகம்பாடி, அப்பர் சுவாமிகளிடம் விடை பெற்றுக்கொண்டு, காவிரியாற்றைக் கடந்து, திருநெய்த்தானத்து நெய்யாடிய பெருமானைப் போற்றி, திருவையாற்றையடைந்த பிள்ளையார் ‘கலையார் மதி’ என்னும் இப்பதிகத்தை யருளினார்கள்.

பண்: தக்கராகம்

பதிக எண்:36

திருச்சிற்றம்பலம்

382. கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. 1

383. மதியொன் றியகொன் றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு

__________________________________________________

1. பொ-ரை: ஒரு கலைப் பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளிவரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு ஆகும்.

கு-ரை: இப்பதிகப்பாடல் பத்தும் இறைவன் இடம் திருவையாறு என்கின்றது. பாடல்கள்தோறும் இறைவனது மதி, கொன்றை, கங்கை, வன்னி, கொக்கிறகு, தலைமாலை முதலிய அணிவகைகளும அவர் வீரமும் அறிவிக்கப்பெறுகின்றன. உரநீர் - வலியநீர். மலையாரம் - மலையிற்பிறந்த முத்துக்கள்.

2. பொ-ரை: பிறைமதி பொருந்திய சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும், தக்க யாகத்தில் வீரபததிரரை ஏவிச் சந்திரனைக் காலால் உதைத்தவனுமான சிவபெருமான்