பக்கம் எண் :

259

யாதலால் இப்பெயர் பெற்றது.

     இது மயிலாப்பூருக்குத் தெற்கே 5. கி. மீ. தூரத்தில் இருக்கின்றது.
இது தொண்டை நாட்டின் இருபத்தைந்தாவது தலமாகும்.

     இறைவர் திருப்பெயர் பால்வண்ணநாதர் இறைவி திருப்பெயர்
சொக்கநாயகி. இலிங்கத்திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்திருக்கின்றது.
வான்மீகி முனிவர்க்கு இவ்வூரில் தனிக்கோயில் இருக்கின்றது. இவ்வூர்த்
தலபுராணம் பூவை கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் எழுதப்பெற்றது.
அச்சில் வெளிவந்துள்ளது.

கல்வெட்டு:

     இக்கோயிலில் ஏழுகல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன.
இராஜேந்திரசோழனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதிராஜனுடைய
கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதிராஜனுடைய கல்வெட்டுக்கள் மூன்றும்
இராஜேந்திரதேவனுடைய கல்வெட்டு மூன்றும் இருக்கின்றன. இவைகளின்படி
நுந்தா விளக்கு வைப்பதற்கு ஆடுகள் தானம், கோயில் வழிபாட்டிற்கு
நிலதானம், பூமாலை இடுவதற்குப் பொன் தானம், வழிபாட்டிற்குப் பணமும்
நெல்லும் தானம்செய்யப் பட்டன.

                   87. திருவிளநகர்

     காவிரித் தென்கரையில் உள்ள நாற்பதாவது தலம்.

     மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6. கி. மீ. தூரத்தில் இருக்கின்றது.
மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோயில் செல்லும் பேருந்துகளில்
செல்லலாம்.

     இறைவர் திருப்பெயர் துறை காட்டும் வள்ளலார். அருள்வித்தகர்
என்னும் அந்தணர் பூக்கூடையை எடுத்துக் கொண்டு காவிரியாற்றில்
இறங்கி வந்தபோது, வெள்ளம் அவரை அடித்துக் கொண்டு சென்றது.
அவரோ பூக்கூடையை விடாது சிவபெருமானையே சிந்தித்தார். அவருக்கு
இறைவர் ஒரு துறையை காட்டிக் கரையேறச் செய்து ஞான உபதேசம்
செய்தருளிய காரணத்தால், இப்பெயரை இத்தலத்து நாயகர் பெற்றார்.
“காவிரித்துறை காட்டினார்” என்று இவ்வூர்த் தேவாரத்திலும்
குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.