பதிக
வரலாறு:
திருவையாற்றை நண்ணி வழிபடும் திருஞானசம்பந்தர்
திருத்தொண்டர்களோடு அடைந்து பணிந்த தலங்களுள் முதலாவது இத்
திருப்பெரும்புலியூர். அங்குள்ள திருக்கோயிலை அணைந்து போற்றிப்
புனைந்த தமிழ்த்தொடை இத்திருப்பதிகம்.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்:
203 |
|
பதிக
எண்: 67 |
திருச்சிற்றம்பலம்
2189.
|
மண்ணுமோர்
பாக முடையார்
மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார்
வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார்
கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
1 |
1.
பொ-ரை: திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர்,
தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு
பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை
இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர்.
உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும்
ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர்.
கு-ரை:
சிவபெருமானது விசுவரூபத்தில் ஒவ்வொரு பாகம் மண்ணும்,
அம்மண்ணைப் படைக்கும் பிரமனும், காக்கும் மாலும், விண்ணும், கண்ணும்,
பெண்ணும் உடையவர். வேதத்தை (ச் செய்யுட் கிழமையாக) உடைய நிமலர்.
கங்கையைச் சடையில் ஒளித்தவர். உடையாரும், விமலரும், கரந்தாருமாகிய
சிவபெருமான் புலியூர் பிரியார் என்க. உடையார் எழுவாய், பிரியார்
பயனிலை. பெரும்புலியூர் செயப்படுபொருள். மேலும் இங்ஙனமே கொள்க.
|