3718. |
அக்கினொ
டரவரை யணிதிக ழொளியதொ |
|
ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென விடுபலி
யேகுவர்
கொக்கரை குழன்முழ விழவொடு மிசைவதொர்
சரிதையர்
மிக்கவ ருறைவது விரைகமழ் பொழில்விழி
மிழலையே. 7 |
7.
பொ-ரை: சிவபெருமான், அக்குப்பாசியோடு பாம்பையும்
அரையில் அணிந்தவர். ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர்.
கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப்பேசி, தம் கையில் நீங்காது
பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை
ஏற்பவர். கொக்கரை, குழல், முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க,
நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும்
பண்பினர். தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான்
வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அக்கினோடு - அக்குப்பாசியோடு. அரவு - பாம்பு. அரை
- இடுப்பில் (பூண்டும்). அணிதிகழ் ஒளியது ஓர் ஆமை - அழகால்
விளங்குகின்ற, ஒளியையுடையதாகிய ஆமையோட்டை (மார்பில்) பூண்டும்,
பூண்டு என்பதை முன்னும் கூட்டி எண்ணும்மையை விரிக்க. அக்குக்கு
அரை என்றதனால் ஆமைக்கு மார்பு கொள்க. இக்கு உக - கரும்பின்
சுவை சொட்ட என்றது இன்சொற்கள் பேசி என்ற கருத்து. கரும்பின் சுவை
- சொல்லினிமை குறிப்பதால் உவம ஆகுபெயர், உக என்றதனால் கரும்பின்
சுவை கொள்க. மலிதலை - கையில் நீங்காது பொருந்திய மண்டையோடு.
கலன் என - பாத்திரமாக, பலி ஏகுவர் - பலிக்குச் செல்வார். கொக்கரை
முதலிய வாத்தியங்கள் ஆரவாரிக்க நடக்கும் உற்சவங்களில் அடியார்
செய்யும் சிறப்புக்களை ஏற்றுக்கொண்டு காட்சியளிக்கும் இயல்பையுடையவர்.
கண்ணினாலவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல், மண்ணினிற் பிறந்தார்
பெறும்பயன் ஆகையால் அவர்கட்கு எழுந்தருளி அருள் செய்யும் திறன்
மூன்றாம் அடியிற் குறித்த பொருள். மிக்கவர் - தன்னின் மிக்கவரில்லையாக
மேம்பட்டவர். "யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்" என்றபடி
(தி.8 திருவாசகம்).
|