பக்கம் எண் :

478திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2913. சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை
       தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ
     காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன
     வாயிலில்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர
     மேட்டியே.                          4


     கு-ரை: வெல்கொடி - வெல்லும்கொடி. விறல்பாரிடம் புடைபட
-வலிமையையுடைய பூதங்கள் சூழ. ஆடிய வேடத்தானும் - ஆடிய
கோலத்தை உடையவனும். தொடைநவிலக் கொன்றை அம்தாரினானும் -
மாலையாக எடுத்துச் செல்லப்படும் கொன்றை மாலையையுடையவனும்,
கொன்றை மலர் ஓங்கார வடிவு உடைமையால் பிரணவமந்திரத்துக்கு
உரியபொருள். சிவபெருமானே (பிறரல்லர்) எனற்கு அறிகுறியாய் நிலவுவது.
மழுப்படை ஏந்திய ஆடும் பரமனன்றே - புனவாயிலில் கொன்றை
யந்தாரினானுமாயிருப்பவன்.

     4. பொ-ரை: திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்
வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன். தாழ்ந்த நீண்ட
சடையுடையவன். உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன். சீறிப் படமாடும்
பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன். திருப்புனவாயில் என்னும்
திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில்
எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான்.

     கு-ரை: வெண்சங்கத்தோடு அணிகாதினான் - “சங்கக் குழையார்”
என்ற சுந்தர மூர்த்திகள் தேவாரத்தாலும் காண்க.

     அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் - உள்ளங்கையில் விளங்கும்
நெருப்பை ஏந்தினவனும். அரவம்மணிமார்பு விரித்தல் விகாரம், இசையின்
பொருட்டு.

     பைங்கண் வெள்ஏறு - பசிய கண்ணையுடைய வெள்ஏறு - இவ் ஈற்றடி
திருநள்ளாற்றுப் பதிகத்திலும் ஞானசம்பந்தப்பெருமான் திருவாயில் வருகிறது.