3155. |
மடவரல் பங்கினன் மலைதனை மதியாது |
|
சடசட
வெடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர வூன்றியங் கேயவற் கருள்செய்தான்
திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே. 8 |
3156. |
ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும் |
|
காணொணா
வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம்
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே. 9 |
தெண்திரை
கழனி சூழ்-தெளிவாகிய அலைகளையுடைய கழனி சூழ்ந்த
(திருவுசாத்தானம்) கொண்ட + இரை = பெயரெச்ச விகுதி தொகுத்தல்
விகாரம். அது அறு கானிறை மலரைம் பானிறை யணிந்தேனணங்கே என்ற
திருக்கோவையாரிற் போல.
8.
பொ-ரை: உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டு விளங்கும் இறைவன், கயிலைமலையை மதியாது பெயர்த்தெடுத்த
இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றி
அம்மலையின்கீழ் அவனை அடர்த்து, பின்னர் இராவணன் தன் தவறுணர்ந்து
வழிபட அவனுக்கு அருள் செய்தவன். அப்பெருமான் உறுதியாக
வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
மடவரல் - (என்றும்) இளமைத் தன்மையையுடைய அம்பிகை.
திடம் என - ஏனைத் தலங்களிலும் இஃது உறுதியை உடையதாக.
9.
பொ-ரை: இறைவர் ஆணுமல்லர். பெண்ணுமல்லர். பிரமனும்,
திருமாலும் காணொணாத வண்ணம் விளங்குபவர். தம்மை நினைந்து
வழிபடும் அன்பர்களின் மனத்தில் நிறைந்துள்ளவர். தம்மை வழிபடும்
அடியவர்களின் உடல்நோயை நீக்குவதோடு பிறவி நோயையும் தீர்ப்பவர்.
அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் ஆகாயமளாவிய மாளிகைகள்
உடைய திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
பிணியொடும் பிறப்பு அறுப்பான் - மலமாயை
கன்மங்களோடும் பிறப்பை அறுப்பவன். சேண் - ஆகாயம்.
|