|
பதிக வரலாறு:
திருவோத்தூரில்
ஆண் பனையைப் பெண்பனையாக்கிச் சிவத்திற்கூட்டி
யருளிய சண்பைவேந்தர், பல பதிகளைப் போற்றியபின், மங்கைபாகர்
அமர்ந்தருளும் மாகறலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம்.
திருவிராகம்
பண்: சாதாரி
ப.தொ.எண்:330 |
|
பதிக
எண்: 72 |
திருச்சிற்றம்பலம்
3570. |
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் |
|
பாடல்விளை
யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி
நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே. 1 |
1.
பொ - ரை: நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும்
பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க,
மேகத்தைத்தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும்,
அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை
மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை
உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை
உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது
நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.
கு-ரை:
விங்கு விளைகழனி - இஞ்சி விளையும் கழனியிலே, மிகு
கடைசியர்கள் - மிக்க பள்ளத்தியர்கள், பாடல் விளையாடல் - பாடலும்
விளையாடலுமாகிய, அரவம் - ஓசைகளையும், மங்குலொடு நீள்கொடிகள் -
மேகமண்டலம் வரை நீண்ட கொடிகளையுடைய.
|