பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)73. திருப்பட்டீச்சுரம்919

73. திருப்பட்டீச்சரம்

பதிக வரலாறு:

     திருச்சத்திமுற்றத்தை வழிபட்ட முத்தமிழ் விரகர் முத்துப் பந்தர்
நிழலில், பொன்னம்பலவாணன் குஞ்சிதபாத நீழலென அமர்ந்து, எதிர்
கொள்ள முகமலர்ந்து, சேரவரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம்
அணைந்து, புறத்திறைஞ்சி வலங்கொண்டு, வெண்கோட்டுப் பன்றி கிளைத்து
அறியாத பாத தாமரை கண்டு தொழுது விழுந்து எழுந்து போற்றிசைத்த
மொழிமாலை இத்திருப்பதிகம்.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்:331   பதிக எண்: 73

திருச்சிற்றம்பலம்

3581. பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
       பாகமதின் மூன்றொர்கணையால்
கூடவெரி யூட்டியெழி்ல் காட்டிநிழல்
     கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
     மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
     காட்டிவினை வீடுமவரே.     1


     1. பொ-ரை: சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து
வேதப் பொருளாயும் விளங்குபவர். பிறைச்சந்திரனைச் சூடியவர். பல
வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக்
கொண்டவர். மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக்
காட்டியவர். நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில்,
மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும்
திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். பாம்பைக் கச்சாகக் கட்டியவர்.
வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப்
போக்கி முத்திநெறி அருளவல்லவர்.