பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)75. திருச்சண்பைநகர்945

3605. போழுமதி தாழுநதி பொங்கரவு
       தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
     மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை
     துன்னுபொழின் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
     வுந்துதகு சண்பைநகரே.              3


     3. பொ-ரை: வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும்,
கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும், சீறும் பாம்புகளும் தங்குகின்ற
முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான், யாழ் போன்ற இனிய
மொழியையும், மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே
பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான்
வீற்றிருந்தருளும் தலம், வாழை, புலிநகக் கொன்றை, மகிழ், புன்னை முதலிய
மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய
தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம்
செய்யும் திருச்சண்பை நகராகும்.

     கு-ரை: போழும் - (வட்டவடிவை) பிளந்தால் அனைய. மதி -
பிறைச்சந்திரனும். தாழும்நதி - கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும்.
பொங்கு அரவு - மிகுந்த பாம்புகளும். தங்கு - தங்குகின்ற. புரி - முறுக்கிய
(புன்சடையினன்) யாழின் மொழி - வீணையின் ஓசையையொத்த (மொழி).
மாழை விழி - மாம்பிஞ்சுபோன்ற கண்ணையும். ஏழை இள மாதின் ஒடு -
தனக்கென ஒரு செயல் இல்லாதவளாகிய இளமையுடைய பெண்
பிள்ளையுடனே. இருந்த பதிதான் - தங்கி இருக்கும் தலமாவது. வாழை -
வாழை மரங்களும், வளர்ஞாழல் - வளர்கின்ற புலிநகக் கொன்றையும்.
மகிழ் - மகிழமரங்களும். மன்னு பு(ன்)னை - நிலைபெற்ற புன்னை
மரங்களும். துன்னு - அடர்ந்த. பொழில்மாடு - சோலைகளில். தாழை
முகிழ் - தாழம் அரும்பை. வேழம் - யானையின். இகு - ஒடித்த.
தந்தமென - தந்தமென்று. உந்துதரு - (சூடாது) அலட்சியம் செய்யும்
(சண்பைநகரே.)

     “எத்திறன் நின்றான் ஈசன் அத்திறத்து அவளும் நிற்பள்” என்னும்
உண்மை நூல் (சித்தியார் சூ. 2.75.) மொழிபற்றி ‘ஏழை’ யென்றார்.
‘தாழை...உந்து’ - திரிபதிசய அணி.