பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)75. திருச்சண்பைநகர்947

  இணங்கெழுவி யாடுகொடி மாடமதி
     னீடுவிரை யார் புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொ டாமரையி
     லன்னம்வளர் சண்பைநகரே.           5


நீங்காத பரம்பொருளும், ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும்,
உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும்,
அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்
தருளும் தலமாவது, ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட
கொடிகளையுடைய மாடங்களும், மதில்களும் உடையதும், மணம் பொருந்திய
புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த
தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய
திருச்சண்பைநகர் ஆகும்.

     கு-ரை: பண் (அம்) - இசை. கெழுவு - பொருந்திய. பாடலினொடு
ஆடல் பிரியாத - பாடலையும் ஆடலையும் நீங்காத; பரமேட்டி, பகவன்
- ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களையும் உடையவனும். அணங்கெழுவு
- பெண் பொருந்திய. பாகமுடை - இடப்பாகம் உள்ள. ஆகம் உடை -
உடம்பை உடைய. அன்பர் பெருமானது - அன்பர்களுக்கெல்லாம்
தலைவனாகிய சிவபெருமானது (இடம் ஆம்). எழுவி - நாட்டப்பட்டு.
இணங்கு - ஒன்றோடு ஒன்று ஒத்த. ஆடுகொடி - ஆடும் கொடிகளை
யுடைய. மாடம் அதில் - மாளிகைகளில். நீடுவிரையார் - மாதர்; பூசுவன,
சூடுவனவற்றால் வாசனை மிக்கு. புறவு எலாம் - புறாக்கள் எல்லாம்.
தண்அம்கெழுவி - மகிழ்ச்சி பொருந்தி. (உலாவ). ஏடு அலர்கொள்
தாமரையில் - இதழ்கள் விரிந்த தாமரை மலர்களில். அன்னம் வளர் -
அன்னங்கள் வளர்கின்ற (சண்பை நகரே).

     ஆர் - ஆர்ந்து. வினையெச்சம் பகுதியளவாய் நின்றது. நம்மினத்தில்
ஒரு பறவை வந்து பேறு பெற்ற இடம் நமக்கு மிக்க உறவாகுமென்று
புறாக்கள் மகிழ்கின்றன. தண் - குளிர்ச்சி; மகிழ்ச்சி மேல் நின்றது.
“சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே”
என்புழிப்போல. தண்பண் என்பன தனிமொழிக்கண்ணும் சாரியை யேற்றன.