பக்கம் எண் :

108
 

இந்த ஆமூர், மேல் ஆமூர், கீழ்ஆமூர்என்னும் இரண்டு பகுதியினை உடையதாய் இருந்தது. இவற்றுள் கீழாமூரைப் பற்றி இவ்வூர்க் கல்வெட்டுக்கள் “திருமுனைப்பாடிக்கீழாமூர் நாட்டு” எனக் குறிக்கின்றன. எனவே கீழாமூர் ஒருநாடாகவும் விளங்கியிருந்தது. கண்ணமங்கலம், மானிநல்லூர், கோட்டிளம்பாக்கம், தொறுப்பாடி முதலானவை, இக்கீழாமூர்நாட்டில் அடங்கியுள்ள சில ஊர்கள் என இக்கோயில் கல்வெட்டு அறிவிக்கின்றது.

அளிக்கப்பெற்ற நிவந்தங்களில்சில:

திருவீரட்டானமுடைய மகாதேவர்க்கு, உச்சியம்போது சந்தியில், சாத்தியருள நாள் ஒன்றிற்குத் திருப்பள்ளித்தாமம் பதக்காகச் சந்திராதித்தவல் செலுத்தும் பொருட்டு, சோழமண்டலத்து, அருமொழித் தேவ வளநாட்டு வாஞ்சியூர், வாஞ்சியூர்க் கிழவன் நாராயணன் ராஜராஜன், பனையூர்நாட்டு, ஆரங்கூர் நாட்டு, காட்டுப்பாக்கத்தில் பதினாறுசாண் கோலால் நூறுகுழி கொண்டது ஒரு மாவாக நிலம் அரையே நான்மாவரை அரைக்காணிக் கீழ்க்கால் நிலத்தை முதலாம் இராஜேந்திரசோழ தேவரின் 23ஆம் ஆட்சி ஆண்டில் வாங்கி அளித்திருந்தான்.

திருவீரட்டானமுடையார். திருச்சிற்றம்பலமுடையார் திருவெழுச்சிக்குப் பெருந்திருவமுதுக்குச் செந்நெலரிசி பதின்கலத்துக்கு நெல் இருபத்தைங்கலமும், பலவர்க்கத்துக் கறியமுது மூவாயிரப் பலத்துக்கு நெல் முக்கலமும், மிளகமுது நானாழிக்கு நெல் நாற்கலமும், தயிரமுது கலத்துக்கு நெல்கலமும், சர்க்கரையமுது நிறை நாலுக்கு நெல் நாற்கலமும், உப்பமுது தூணிக்கு நெல்கலமும், புளியமுது நிறை ஒன்றுக்கு நெல் கலமும், அடைக்காயமுதுக்குப் பாக்கு ஆயிரத்துக்கும் வெற்றிலைப்பற்று ஐம்பதுக்கும் திரமம் இரண்டுக்கும், நெல் ஆறு கலமும், செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம் இரண்டாயிரம் கொள்ளக்காசு அரைக்கு நெல் பதின்கலமும், சீதாரிக்கு நெல் இருகலமும், வழக்கத்துக்குப் பலவர்க்கத்துப் பரிசட்ட உரு எண்பதுக்கு, காசு ஐந்துக்கு நெல் நூற்றுக்கலமும், தானம் பண்ணியருளப் பொன் அரைக் கழஞ்சுக்கு நெல் இருபதின் கலமும், திருக்காப்பு நாணுக்குப் பொன் அரைக்காலுக்கு நெல் இருகலனே தூணிப்பதக்கும் அடிக்கீழிட அரிசி பதக்குக்கு நெல் ஐங்குறுணியும் ஆக இந்நெல் இருநூற்றுக்கலனே இருதூணிக்கும், திருவீரட்டான முடையார் தேவதானமான கொழுந்தாழ்வார் ஏரிகரைக்குக் கிழக்கும், திருவீரட்டானமுடையான் வாய்க்காலுக்கு வடக்கும், குப்பை என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு