பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)முதல் பதிப்பின் முகவுரை47

     நம் சமயாசாரியர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த திருமூலர் காலத்திலே சன்மார்க்க நெறியை உபதேசித்த ஏழு மடங்கள் இருந்தன எனவும், மூலர், காலங்கர், அசோகர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர் ஆகிய அவர்களுள் மூலரது சீடர்கள் மூலன் பரம்பரையினர் எனப்பட்டனர் எனவும் அறிகின்றோம். இதனால் கி.பி.4,5,6 ஆம் நூற்றாண்டுகளிலேயே மடங்களின் தொன்னிலை, தொண்டுநிலை பற்றி நன்கு தெளியலாம்.
     மடங்களில் வாழ்ந்து மோனத்தவம் பெருக்கி வையகம் வாழத் தொண்டு புரியும் ஞானச் சான்றோர்களது அருள் மொழிகள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உயர்மொழிகளாக உள்ளன. சமயாசாரியப் பெருமக்களது திருவருள் மொழிகளாகிய திருமுறைகளைப் பொருள் உணர்ந்து சொல்லுதல் வாழ்வைத் திருத்திப் பண்படுத்தும் என்பது ஆன்றோர் அநுபவம்.
     இத்தருமை ஆதீன ஆதிபரமாசாரிய சுவாமிகளும், "சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்" என்று பணித்தருளினார்கள். இத்திருமுறைகள் காட்டும் செம்பொருளை உணர்ந்தாலன்றி இந்நெறி நிற்றல் இனிது கூடாமையின், நல்ல உரை விளக்கத்தோடு திருமுறைகளை உலகிற்கு வழங்குதலும் தேவையாயிற்று.
     இதனைத் திருவுளத் தடைத்தருளிய தருமை ஆதீனம் 25-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கருணைப் பெருக்கால் இதுகாறும் முதல் நான்கு திருமுறைகளும் குறிப்புரை, தலக்கல்வெட்டு, பதிக வரலாறுகளுடன் தமிழ் உலகு பெற வெளிவந்தன.
     இந்த ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு சுவாமிகளது திருக்குறுந்தொகைப் பாடல்களை உட்கொண்டொளிர்வது. கோயில் முதலாக ஆதிபுராணத் திருக்குறுந்தொகையீறாக நூறு பதிகங்களை உடையது.
     ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் அருளாணையைச் சென்னியிற்றாங்கி, இப்பதிகங்கட்குக் குறிப்புரை, சொல் - அரும்பொருள் அகராதிகள் எழுதியவர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கும் தேவார இசைமணி, வித்துவான், திரு. வி.சா. குருசாமி தேசிகர்.
     பொழிப்புரை எழுதியவர், தருமை ஆதீனப் பல்கலைக்