பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்71

ஐந்தாம் திருமுறையில் உள்ள

தலங்களின்

வரலாற்றுக் குறிப்புக்கள்

1. திருவண்ணாமலை
தலம்:
     நடுநாட்டுத் தலம், புகழ்பெற்ற தமிழக நகரங்களில் ஒன்று. விழுப்புரம்-காட்பாடி வழியில் தொடர் வண்டி நிலையம். அனைத்து நகரங்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. நினைக்க முத்திகிடைக்கும் தலம். இது திருவண்ணாமலை-சம்புவராயர் மாவட்டத்தின் தலை நகரம். சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்தமையின் மாறின.
     இறைவன்பெயர் அண்ணாமலைநாதர்; அருணாசலேசுவரர் என்றும் கூறுவர். இறைவிபெயர் உண்ணாமுலையம்மை; அபீதகுஜாம்பாள் என்றும் கூறுவர். விநாயகர் பெயர் ஸ்ரீ சம்பந்தவிநாயகர்; முக்குறுணி விநாயகர் என்றுங் கூறுவர். தலவிருட்சம் மகிழமரம்.
தீர்த்தம்:
     கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. சிறந்தவை சிவகங்கையும், பிரம தீர்த்தமும், மலைப்பகுதியிலுள்ள அக்னிதீர்த்தமும், இந்திர தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

     குறிப்பு: இத் தல வரலாற்றுக் குறிப்புக்கள், கோயம்புத்தூர், திரு.சி.எம். இராமச்சந்திர செட்டியார் அவர்களாலும், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்களாலும், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் வி.சா.குருசாமி தேசிகர் அவர்களாலும் எழுதியுதவப் பெற்றன.