(ஐந்தாம் திருமுறை) | தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் | 73 | |
| பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்துராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன. | முதல் இராஜேந்திரனுடைய காலத்தில் (கி.பி. 1038.) திருவண்ணாமலை, மதுராந்தகவளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்றும், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1179.) காலத்தில் இராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை அண்ணாநாட்டுத்திருவண்ணாமலை என்றும், மேற்படிசோழனுடைய 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1204) வாணகோப்பாடிப் பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், விஜயநகர இராயர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்குன்றக் கோட்டத்துப் பெண்ணைவடகரை வாணகோப்பாடி அண்ணாநாட்டுத் தனியூர் திருவண்ணாமலை என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. இதனால் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய வளநாட்டுப் பெயர் முதலில் மதுராந்தகவளநாடு என்றிருந்து, பிறகு இராஜராஜ வளநாடு என்று மாறி, இறுதியில் ஜெயங்கொண்ட சோழமண்டலம் ஆயிற்றென்றும், இம்மண்டலத்தின் உட்பிரிவாகிய செங்குன்றக் கோட்டத்தினுள் அண்ணாநாட்டுத் தனியூராகக் குறிக்கப்பட்டதென்றும் அறியக்கிடக்கும். | பல்லவர் காலத்தில் முந்திய கல்வெட்டொன்றும் இல்லாமையால், கோயில் செங்கற்சுதை மாடமாக இருந்ததென்றும், மலையின்மேல் அண்ணாமலையார் கோயில்கொண்டிருந்திருக்க வேண்டுமென்றும் யூகிக்க வேண்டியுள்ளது.முதற்பிராகாரத்துச் சுவரில் கங்கை கொண்ட இராஜேந்திரன் கல்வட்டு (கி.பி.1028) காணப்பெறுவதால், இதற்கு முன்பே கருங்கல் திருப்பணி நடந்திருக்க வேண்டும், முதற்பிராகாரத்து விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில், சிதம்பரேசர் கோயில், ஆகிய இரண்டின் சுவர்களிலும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சாஸனங்கள் காணப்படுகின்றன. கிளிக்கோபுரத்து 33 கல்வெட்டில் பழைமையுடைய வீரராஜேந்திர சோழனது இரண்டாவது ஆட்சியாண்டின் (கி.பி.1063) முன்பே கருங்கல் திருப்பணியாயிருக்க வேண்டும். திருக்காமக்கோட்டமுடைய உண்ணாமுலைநாச்சியார் கோட்டம் தனியாக கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றது. கல்வெட்டுக்களில் திருக்காமக் கோட்டம் எனக் குறிக்கப்பெறும். | பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த கல்வெட்டுக்களில் வீரராகவன் திருமதில், வாணாதிராயன் திருமதில், திருவேகம்பமுடையான் திருமதில் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. | | |
|
|