பக்கம் எண் :

828திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

2084.
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

9

2085.
அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.

10

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: அருக்கன் - சூரியன். அரனுரு - அட்டமூர்த்த வடிவங்களில் ஒன்று.
     9.பொ-ரை: பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர்.
     கு-ரை: அமுது - அன்பராயவர் உள்ளத்து ஊறும் இறைவன் திருவருள் மாயன் - திருமால்.
     10.பொ-ரை: கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள், இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர்.
     கு-ரை: அரட்டு - துட்டச்செயல். அருத்தி - அன்பு. கயவக் கணம் - கீழ்மக்கட்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்

ஐந்தாம் திருமுறை

மூலமும் - உரையும் நிறைவுற்றது.