பார்க்க" என்று அருளினான் இறைவன். அவ் வண்ணமே சிவகோசரியார் பூசனையை முடித்து மறைந்திருந்தார். வழக்கம்போல் திண்ணனார் பூசனையியற்ற வந்தார். பெருமானின் வலக்கண்ணில் உதிரம் சோர்ந்தது கண்டு மனம் பதைத்தார். பலவகை மூலிகைச்சாறுகளினாலும் அது நிற்கா திருக்கக் கண்டு தமது கண்ணைத் தோண்டி அப்பியதும் நின்றது கண்டு மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார். பின்னர் இடக் கண்ணிலிருந்தும் உதிரம் சோர்வதைக் கண்டுதமது மற்றொரு கண்ணையும் தோண்டி அப்ப முயன்றார். அது பொழுது "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப, என்னன் புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப" என்று திருவாய் மலர்ந்து தடுத்துத் தமது வலப்புற மிருக்கும் பேறளித்தான் இறைவன். பெரியபுராணத்தில் இறைவன் சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் (கண்ணப்பரின்) அன்பைக் கூறும் பகுதி படித்தின்புறத்தக்கது. அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் | அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் | அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும் | அவனுடைய நிலைஇவ்வா றறிநீஎன் றருள் செய்வார் | (தி.12 கண்ணப்பர் புரா. 157) |
திருநாவுக்கரசு சுவாமிகள் கண்ணப்பரின் வரலாற்றையே தமது திருப்பாடல்களில் சுருக்கமும் அழகும் தோன்றக் குறிப்பிடு கின்றார். திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில், காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம் | தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித் | தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண் | கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்டனாரே. | (தி.4. ப.49. பா.7) |
என்றும், திருச்சாய்க்காட்டுத் திருப்பதிகத்தில் "குவப்பெருந்தடக்கை வேடன் --" என்றும், திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகத்தில்" "கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார்" (தி.6. ப.12. பா.6) என்றும், திருமழபாடித் திருத்தாண்டகத்தில் "கண்ணப்பர்க்கருள் செய்த காளைகண்டாய்" (தி.6. ப.39. பா.9) என்றும் குறிப்பிடுகின்றார்.
|