கூறித் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்கள் விசாரசருமரிடம் மிக்க அன்புடையனவாய்த் தாமே பாலைச் சொரிந்தன. இதைக்கண்ட விசாரசருமர் மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் எடுத்துப் பாலைக் குடத்தில் பிடித்து அபிஷேகித்து வந்தார். இந்நிகழ்ச்சியை ஒருவன் கண்டு பசுக்களுக்குரியவர்களிடம் தெரிவித்தான். அவர்களும் எச்சதத்தனிடம் குறைகூறினர். மறுநாள் தாமே நேரில் காண எண்ணியவனாய் எச்சதத்தனும் விசாரசருமர் பசுக்களை ஓட்டிச் செல்லும் பொழுது மறைந்து சென்று ஒரு மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தான். நாள் தோறும் செய்வதுபோன்று வழிபாடு செய்வதைக் கண்ட எச்சதத்தன் சினந்து கோல்கொண்டு புடைத்து, பாற்குடத்தைக் காலால் இடறினான். திருவருளில் தோய்ந்து திளைத் திருந்த விசாரசருமர் அருகிருந்த கோலை எடுத்தார்; அதுவே மழுவாக மாறிற்று; அம்மழுவால் தந்தையின் தாளை எறிந்தார். விசாரசருமர்க்கு இறைவன் காட்சிகொடுத்துத் தொண்டர்க்கு நாயகமாந் தன்மையும் சண்டீசர்பதமும் அளித்தார். இந்நிகழ்ச்சியைச் சேக்கிழார், அண்டர் பிரானுந் தொண்டர்தமக் கதிபனாக்கி அனைத்துநாம் | உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் | சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங்கவர்பொற் றடமுடிக்குத் | துண்டமதிசேர் சடைக்கொன்றை மாலைவாங்கிச் சூட்டினார் | (தி.12 சண்டேசுரர் புரா. 56) |
என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசு சுவாமிகள் திருஆப்பாடித் திருப்பதிகத்தில், அண்டமார் அமரர் கோமான் ஆதிஎம் அண்ணல் பாதங் | கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக் | கண்டவன் தாதைபாய்வான் காலற எறியக்கண்டு | தண்டியார்க் கருள்கள் செய்த தலைவர்ஆப் பாடியாரே | (தி.4 ப.48 பா.4) |
என்பது முதலிய பல இடங்களிலும் (தி.4:- ப.49 பா.3 ப.65. பா.6 ப.73 பா.5 தி.5 ப.2 பா.4தி.6 ப.18 பா.10) கூறுவது கண்டு மகிழத்தக்கது.
|