பக்கம் எண் :

55
 

"மதுர மாந்திருத் தாண்டகச் செந்தமிழ்வகுத்த

சதுரன் நாவினுக் கரையன்"

என்று சிவரகசியம் பாடும்.

இவ்வாறு புகழப்பெறும் சிறப்பு உடைய அப்பரடிகள் அமுதத் தமிழ்வாக்கும், அப்பெருமானார் வகுத்தருளிய தமிழ்மரபும், இலக்கிய நுட்பங்களும் பிற மாண்புகளும் கருதிய சேக்கிழார் இவரைத் 'தமிழ்மொழித் தலைவர்' (தி.12 திருஞா. புரா. 598) என்றே கூறிப் போற்றுவர்.

'இன்தமிழ்க்கு மன்னான வாகீசத் திருமுனி' (தி.12 திருநா.புரா. 147) உடையவரசு உலகேத்தும் உழவாரப் படையாளி' (தி.12 தடுத்தாட்கொண்டபுரா. 83) 'வாக்கின் பெருவிறல் மன்னர்' (தி.12 திருஞா. புரா. 269) என்றெல்லாம் சேக்கிழார் பாடும் பகுதிகளைக் காணலாம்.

பாவலர் - அப்பர்:

திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரப் பாக்களில் பெரிதும்ஈடுபட்ட பிற்காலப் பெரியார் ஒருவர் பாடும் பகுதியும் இங்குச் சிந்திக்க இனிக்கும். தண்ணிய தமிழ்க் கவிதைகளை சிவபிரான் திருவைந் தெழுத்துத் திருப்புகழோடு குழைத்துப்பாடிக் கடலில் மிதந்த தாண்டக வேந்தருடைய அருளாற்றல் அப்பெரியார்க்கு எண்ண எண்ண இன்பமளிக்கின்றது; கல்லும் உருகும் கவிபாடிய அப்பரடிகளைப் 'பாவலர்' என்றே அழைக்கின்றார் அவர்.

"செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே
பற்றா மறிவெண் டிரைக்கடல் நீந்திய பாவலனே"

ஆம்; சிவப்பிரகாச சுவாமிகளுடைய புகழுரை இது.

அப்பர் தேவாரப் பெயரமைப்பு:

அப்பரடிகள் தேவாரப் பாக்களின் பெயர்க்காரணத்தைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். 1


1 பன்னிருதிருமுறை வரலாறு: திரு. க. வெள்ளைவாரணனார் பக். 563 - 564.