பக்கம் எண் :

1207
 
எந்தம் மடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.

2


925.பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.

3

 

926.என்ன தெழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.

4



2. பொ-ரை: பந்தாடுதலையும், கிளியை வளர்த்தலையும் பலகாலும் செய்கின்ற, பாவை போல்வாளாகிய உமையவளது மனத்தைக் கவர்பவரும், சிவந்த நெருப்புப்போலும் நிறத்தையுடைய வரும், எங்கள் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாவது, பல பொருள்களைத் தள்ளி வருகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.

கு-ரை: "பந்தும் கிளியும்" என்றாரேனும் அவற்றின்கண் செய்கின்ற செயல்கள் என்பது கொள்க. "போல்", அசைநிலை; வருகின்ற திருப்பாடலிலும் இவ்வாறு கொள்க. உந்துதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க.

3. பொ-ரை: பவளமும், கனியும் போலும் இதழையுடைய, பாவை போன்றவளாகிய உமையது பாகத்தை உடையவனும், கவளத்தை உண்கிற களிற்றி யானையினது தோலைப் போர்த்தவனும், தவழ்ந்து பெயரும் பிறை பொருந்திய சடையையுடையவனும் ஆகிய இறைவனுக்கு இடமாவது, புரளுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.

கு-ரை: "பவளக் கனிவாய்", பல பொருள் உவமை. கவளம் - யானை உண்ணும் உணவு. "தவழும்" என்றதும், சடையின்கண்ணே யாம். ஆகவே, 'மதியைத் தவழச் சேர்த்த சடையான்' என்றவாறாயிற்று. நான்காம் அடியில், உயிரெதுகை வந்தது.

4. பொ-ரை: முதலில் யான் நினைக்குமாறு தன்னைத் தருபவனும், பின்பு என்னால் நினைக்கப்படுவனும் ஆகிய இறைவன், எனது அழகையும், மன உறுதியையும் கவர்தற்பொருட்டு, திருவொற்றியூரில், புன்னை மலர்கள் மலர்கின்ற கானலிடத்தே விளங்குவான்.