என்றும், இவருக்குரிய கொடி தியாகக்கொடி என்றும், இவருடைய தேருக்கு ஆழித்தேர் என்றும், இவரை எழுந்தருளப்பண்ணும் பிள்ளைத் தண்டுகள் திருவாடுதண்டு, மாணிக்கத்தண்டு என்றும் பெயர் பெற்றுள்ளன. இவர் சந்நிதியில் நந்திதேவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இத்தலத்து வழிபாட்டுக் காலங்களுள் திருவந்திக்காப்பு மிக்க விசேடமுடையது. இவருடைய நடனம் அஜபாநடனம், புயங்க நடனம் எனப் பாராட்டப்படும். ஸ்ரீ கமலை ஞானப்பிரகாச சுவாமிகள் தருமை ஆதீனத்தை நிறுவிய ஸ்ரீ குருஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்த அருள்மிகு சித்தீச்சுரம் திருக்கோயில், ஆலயத்தின் வடபால் உள்ளது. தலவிநாயகர் : வாதாபிவிநாயகர். 1. திருவாரூர் மும்மணிக்கோவை : - இது அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமாள் பெருமாள் நாயனாரால் இயற்றப்பெற்றது. பதினோராந் திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாய் விளங்கும் சிறப்புடையது. 2. கமலாலயச் சிறப்பு : - இது சிதம்பரம் மறைஞான சம்பந்தரால் இயற்றப்பெற்றது. 3. திருவாரூர்ப் புராணம் : - நிரம்ப அழகியதேசிகருடைய மாணாக்கராகிய அளகைச் சம்பந்தர் என்பவரால் செய்யப்பெற்றது. 4. திருவாரூர் உலா : - அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் இயற்றப்பெற்றது. 5. தியாகராச லீலை : - திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. இது முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. 6. திருவாரூர் நான்மணிமாலை : - இதை அருளியவர் குமரகுருபர சுவாமிகள். 7. தியாகராசப் பள்ளு : - இதை ஆக்கியோர் பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியிருந்த கமலைஞானப்பிரகாசர் ஆவர். 8. திருவாரூப் பன்மணிமாலை : - இலக்கண விளக்கம் இயற்றிய திருவாரூர் வைத்தியநாததேசிகரால் ஆக்கப்பெற்றது.
|