பக்கம் எண் :

750
 

வந்த இடவழுவமைதி.

நாயன்மாருள் சிலருக்கு நேரே 'அடியேன்' என்றும், சிலருக்கு, 'அவர்தம் அடியார்க்கு அடியேனாகும் முகத்தால் அடியேன்' என்றும் அருளினாராயினும், 'எல்லார்க்கும் நேரேயும், அடியார்க்கு அடியனாம் முகத்தானும் அடியேன்' என்று இருவகை யாலும் அடிமையாதலைக் கூறுதல் திருவுள்ளமன்றி வேறுபாடு இன்று எனக் கொள்க.

இனி, 'ஆரூரில் அம்மானுக்கு ஆள், அடியவர்கட்கெல்லாம் அடிமை' என்றதனால், இறைவனுக்கு ஆட்பட்ட பின்பே அடியவர் கட்கு ஆட்படுதல் கூடும் என்பதும், அடியவர்கட்கு ஆட்பட்ட பின்பே அடிமை நிரம்புவதென்பதும் பெறப்படும். ''ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார்'' (சிவஞானசித்தி, சூ. 12-2) என்ற இடத்தில், ''ஈசனுக்கன் பில்லார்'' என்றதும், நிரம்பிய அன்பில்லாமையையே குறித்தல் அறிக. இதனானே, இத்திருப்பதிகம் சிவனடியாரால் நாள் தோறும் இன்றியமையாது பொருளுணர்ந்து ஓதற்பாலதாயிற்று. இக் கருத்தே பற்றி இதனைச் சேக்கிழார் நாயனார், ''மெய்யடியார் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை'' (தி.12 பெருமிழலை, பு.4) என்று அருளிச் செய்தார். இன்னும்,

''தீதி லாத்திருத் தொண்டத்தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிட''

(தி.12 பெரியபுராணம், திருமலைச்சிறப்பு-25) என்று அவர் அருளினமையின், நம்பியாரூரது திருவவதாரத்தின் சிறப்புப் பயன், இத்திருப் பதிகமே என்பதுணர்க.

ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பரசமயம் நிராகரித்து, சைவசமயத்தை நிலைநிறுத்திச் சென்ற பின்பு, நம்பியாரூரர் திருவவதாரம் செய்து அருளிச்செய்த இத்திருப்பதிகத்தாலே, சைவ சமயம் தன்னிகரின்றித் தழைத்தோங்கியதென்க.

இத்திருப்பதிகத்தின் பொருள், பின்னர் வந்த வகைநூல் விரிநூல்களாலும், பிறவாற்றாலும் இனிது விளங்கி நிற்றலின் இதற்குக் குறிப்புரை மட்டிலே தரப்படுகின்றது.

இதன்கண் தனியடியாரை, 'தொகையடியாரோ' என்று ஐயுறாமைப் பொருட்டு ஒருமைச் சொல்லாலே குறித்தருளினார். ''திருநீலகண்டத்துக்குயவனார், திருநீலகண்டத்துப் பாணனார்' என்றாற்போலும் இடங்களிலும் உயர்வு பற்றி வந்த பன்மையே என்பது இனிது விளங்க அருளினார். காரைக்காலம்மையார் பெண்பாலராகலானும்.