613. | ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம் | | உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக் | | காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை | | முடியன் காரிகை காரண மாக | | ஆரூ ரைம்மறத் தற்கரி யானை | | அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன் | | ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் | | அமர லோகத் திருப்பவர் தாமே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை: 'பரவை' என்பவள் முன்னிலையாக, எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய், தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை, கார் காலத்தில் பூக்கின்ற, மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடையவனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர், அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம். கு-ரை: 'ஆரூரை மறவாமைக்குப் பரவை ஒரு வழியாய் அமைந்தாள்' என்றபடி. "ஆரூரைமறத்தற்கரியானை" என்றாரேனும், 'மறத்தற்கரிய ஆரூரானை' என்றலே திருவுள்ளம் என்க. "காரூர் ................... முடியன்" என்றதனை, "அரியானை" என்றதன் பின்னரும், "அடி நாய்" என்றதனை, 'தொண்டன்' என்றதன் பின்னரும் வைத்துரைக்க. "அமரலோகம்", வடமொழித் தொகைச் சொல். சேரமான் பெருமாள் நாயனார் புராணம் | நாவலர்தம் பெருமானும் திருவாரூர் நகராளும் தேவர்பிரான் கழலொருநாள் மிகநினைந்த சிந்தையராய் ஆவியைஆ ரூரானை மறக்கலுமா மேயென்னும் மேவியசொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார். 156 -தி. 12 சேக்கிழார் |
|