பக்கம் எண் :

திருவாசகம்
140


எம்பெருமானே - எம் தலைவனே, எம்மானே - எம் பெரியோனே, உன் அருள் பெறும் நாள் - உன்னோடு கலத்தற் கேதுவாய திருவருள் எய்துங் காலம், என்று என்றே - எப்போது வருமோ என்றே, வருந்துவன் - மனம் வருந்துகின்றேன்.

விளக்கம் : உலகத்தில் வெறுக்கக்கூடியன இரண்டு; ஒன்று பிறப்பு, மற்றொன்று இறப்பு. இவை இரண்டும் துன்பம் தருவனவாதலால் வெறுக்கத்தக்கனவாம். ஆனால், அடிகள் இவை இரண்டுக்கும் அஞ்சமாட்டேன் என்பார், ‘யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கென கடவேன்’ என்றார். உலகத்தில் விரும்பத்தக்கன இரண்டு; ஒன்று, தேவவுலக வாழ்வு; மற்றொன்று, மண்ணாளும் வாழ்வு. இவை இரண்டும் இன்பம் தருவனவாதலால் விரும்பத்தக்கனவாம். ஆனால், அடிகள் இவை இரண்டும் நிலையான இன்பத்தைத் தருவன அல்ல என்று கருதலால், ‘வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்’ என்றார். ஆனால், நிலையான பேரின்பத்தையருளுவது இறைவன் திருவருள் ஒன்றேயாதலால், அதை மட்டும் விரும்புகின்றேன் என்பார். ‘உன்னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே’ என்றார். "யாஅ மிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால் அருளும் அன்பும் அறமு மூன்றும்" என்ற பரிபாடல் அடிகள் ஒப்பிடத்தக்கன. இவ்வீடு பேற்றையருளும் ஆற்றல் சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என்பார், ‘சிவனே’ என்றார்.

இதனால், இறைவனிடம் வேண்டத்தக்கது திருவருட்பேறு ஒன்றே என்பது கூறப்பட்டது.

12

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாயடியேன்
இருந்துநல் மலர்புனையேன் ஏத்தேன்நாத் தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல்
வருந்துவன்நற் றமியேன்மற் றென்னேநான் ஆமாறே.

பதப்பொருள் : நாயடியேன் - நாய்த்தன்மையுடைய அடியேன், நின் மலர்ப்பாதம் அவை காண்பான் - நின்னுடைய பெருமை மிக்க திருவடிக் கமலங்களைக் காண்பதற்காக, வருந்துவன் - மிகவும் கவலைப்படுகின்றேன், இருந்தும் - உலகத்தே வாழ்ந்திருந்தும், நல் மலர் புனையேன் - உனக்கு நல்ல பூமாலையைத் தொடுத்துச் சார்த்தேன், நா தழும்பு ஏற - நாவிலே தழும்பு உண்டாகும்படியாக, ஏத்தேன் - உன்னை வாழ்த்தமாட்டேன், பொருந்திய பொன் - பொருத்தமாகிய மேருமலையாகிய, சிலை குனித்தாய் - வில்லை வளைத்தவனே, அருள் அமுதம் புரியாயேல் - நினது அருளோடு கூடிய பேரின்ப அமுதத்தை எனக்குத் கொடுக்கமாட்டாயாயின், நல்தமியேன்-