காரணத்தை வைராக்கியமாகிய நெருப்பிலிட்டு வாட்டினால் முன்னர்க் குழையும்; பின்னர் உருகும். இதை விளக்கவே குழைதலை முன்னும், உருகுதலைப் பின்னும் அடிகள் கூறினார். ஏத்துதல் - பாடுதல், உரைத்தல் - உரைநடையாகக் கூறல், தூகல் - விளக்கல், மெழுகல் - சாணத்தால் சுத்தம் செய்தல். மனமுருகிப் பாடி உழவாரப் பணியில் ஈடுபடுதல் இறைவன் திருவடியையடையும் ஆறு. "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா, நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி, தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி" என்றார் திருநாவுக்கரசரும். முக்கரண வழிபாடும் செய்யாது வீணே காலத்தைக் கழிக்கின்றேன் என்பார், ‘சாமாறே விரைகின்றேன்’ என்றார். இதனால், முக்காரணங்களாலும் இறைவனை வழிபட்டால் அவன் திருவடியையடையலாம் என்பது கூறப்பட்டது. 14 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே. பதப்பொருள் : வான் ஆகி - ஆகாயமாகியும், மண் ஆகி - நிலமாகியும், வளி ஆகி - காற்றாகியும், ஒளி ஆகி - ஒளியுடைப் பொருள் களாகியும், ஊன் ஆகி - உடம்பாகியும், உயிர் ஆகி - உடம்பிலுள்ள உயிர்களாகியும், உண்மையும் ஆய் - அன்பர்க்கு மெய்ப்பொருளாகியும், இன்மையும் ஆய் - அல்லாதார்க்குப் பொய்ப்பொருளாகியும், கோன் ஆகி - எல்லாவற்றிற்கும் முதல்வனாகியும், அவர் அவரை - ஒவ்வொருவரையும், யான் எனது என்று கூத்தாட்டுவான் ஆகி - யான் என்றும் எனது என்றும் கருதும் நிலையில் வைத்து கூத்தாடும்படி செய்பவனாகியும், நின்றாயை - நிற்கின்ற உன்னை, என் சொல்லி வாழ்த்துவன் - நான் யாது சொல்லிப் புகழ்வேன்? விளக்கம் : ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறு திங்களும் உயிரும் ஆகிய எட்டும் இறைவனுக்கு உடல் என்பர். இதனை, ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி’ என்ற திருநாவுக்கரசர் வாக்காலும் அறியலாம். எல்லாவற்றுக்கும் இறைவனே முதல்வனாய் இருக்கின்றான் என்பார், ‘கோனாகி’ என்றார். இறைவன் இயக்கவே உயிர்கள் இயங்குகின்றன என்ற உண்மையைக் கூற, ‘அவரவரைக் கூத்தாட்டுவனாகி’ என்றார். யான் என்பது அகப்பற்று; எனது என்பது புறப்பற்று. வியாபகப் பொருளான இறைவனை வியாப்பியப் பொருளாய் அடங்கியிருக்கும் உயிர்
|