கலந்த அன்பர்' என்றும், அத்தகைய அன்பே தமக்கும் வேண்டும் என்பார், 'அன்பர் அன்பு எனக்கும் ஆக வேண்டும்' என்றும் கூறினார். இதனால், மெய்யன்புடையவர்களே இறைவன் கருணைக்குப் பாத்திரமாவார்கள் என்பது கூறப்பட்டது. 73 வேண்டும் நின்க ழற்கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ என்ற ருளுநீ பூண்டு கொண்டடிய னேனும் போற்றி போற்றி என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்வ ணங்கவே. பதப்பொருள் : மன்ன - அரசனே, அடியனேனும் - அடியேனாகிய யானும், மாண்டு மாண்டு வந்து வந்தும் - பலகால் இறந்து பிறந்து வந்தாலும், பூண்டுகொண்டு - உன் திருவடிகளைச் சென்னிமேற்கொண்டு, போற்றி போற்றி என்றும் என்றும் - வணக்கம் வணக்கம் என்று சொல்லிச் சொல்லி, நின் வணங்க - உன்னையே வணங்குதற்கு, நின் கழற்கண் - உன் திருவடிக்கண், அன்பு வேண்டும் - உண்மையான அன்பு வேண்டுவதாகும், ஆதலால், நீ - நீ, பொய்மை தீர்த்து - என்னுடைய பொய்யினை நீக்கி, மெய்மையே - உண்மையாகவே, ஆண்டுகொண்டு - ஆண்டுகொண்டருளி, நாயினேனை - நாயனையேனுக்கு, ஆவ என்று அருள் - ஐயோ என்று இரங்கி அருள் செய்வாயாக. விளக்கம்: பிறவிகள் பல எடுத்தெடுத்தே இளைத்த போதிலும், இறைவன் திருவடிக்கண் அன்பு இருப்பின் இழுக்கில்லை என்பார், 'மாண்டு மாண்டு வந்து வந்தும் மன்ன நின் வணங்க' என்றார். 'இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் - மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்ற அப்பர் திருவாக்கும் காண்க. அவன் திருவடிக்கு அன்பும் அவனே அருள வேண்டும் என்பார், 'ஆவ என்றருளு நீ' என்றார். 'ஆவ' என்பது இரக்கக் குறிப்பு. காரைக்காலம்மையாரும் இறவாத இன்ப அன்பினை இறைவனையே வேண்டிப் பெற்றமை இங்கு நினைவுகூரத்தக்கது. இதனால், பிறவி எடுத்த போதிலும் இறைவன் திருவடியை மறவாதிருப்பின் நன்மையே விளையும் என்பது கூறப்பட்டது. 74 வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேத நான்கும்ஓலமிட் டுணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ ருண்மை இன்மையின் வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற் கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநி னைப்பதே.
|