பக்கம் எண் :

திருவாசகம்
199


உண்டு இருந்தது உண்டு' என்றார். அன்புடையவர்கட்கு உரிய செயலைச் செய்யாது, அன்புடையவன் என்று சொல்லிக் கொள்ளுதல் நகைப்பிற்கு இடமாகும் என்பார், 'விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சை' என்றார்.

இதனால், இறைவன் திருவடி இன்பத்தை அறிந்தும் பிரிந்து வாழ்வது கூடாது என்பது கூறப்பட்டது.

80

9. ஆனந்த பரவசம்

பேரின்ப அனுபவத்தில் தன்னை மறந்திருத்தல் ஆனந்த பரவசமாகும்.

விச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய்
இச்சைக் கானார் எல்லோரும் வந்துன் தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்நான் செய்கேன் பேசாயே.

பதப்பொருள் : ஆருர் எம் பிச்சைத் தேவா - திருவாரூரில் எழுந்தருளியுள்ள எங்கள் சிவபெருமானே, விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று - விதையின் அழிவு பொய்யென்னும் மரத்திற்கு வரலாகாது என்று கருதி, இங்கு - இவ்வுலகத்திலே, எனை வைத்தாய் - என்னை இருக்கச் செய்தாய்; இச்சைக்கு ஆனார் எல்லாரும் - உன் விருப்பத்திற்கு ஒத்தவர் எல்லோரும், வந்து உன் தாள் சேர்ந்தார் - வந்து உன் திருவடியை அடைந்தார்கள்; யானோ, அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் - பிறவி வருமே என்ற பயத்தினாலே துன்பத்தில் அழுந்துகின்றேன்; நான் என் செய்கேன் - நான் உய்வதற்கு யாது செய்வேன்? பேசாய் - கூறியருள்வாயாக.

விளக்கம் : விச்சு 'வித்து' என்பதன் போலி. விதையிலிருந்து மரம் அழிவின்றித் தோன்றி வளர்ச்சி பெறுவது போல, தம்மிடமிருந்து பொய் தோன்றி வளரும் என்பார், தம்மைப் பொய்க்கு வித்தாகக் கூறினார். முன்பு அச்சந்தவிர்த்த சேவகனாதலின், இனியும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பார், 'அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்' என்று குறிப்பாகக் கூறி முறையிடுகிறார். சிவபெருமான் பிச்சைக் கோலத்துடன் தாருகா வனத்தில் சென்று பலியேற்றது பற்றி, 'பிச்சைத் தேவா' என்று கூறினார். இவ்வரலாறு முன்னர் விளக்கப்பட்டது.

இதனால், இறைவனை அடைதற்கு இச்சை வேண்டும் என்பது கூறப்பட்டது.

81