123. நையாத மனத்தினனை-வருந்தாது மகிழ்வுடன் இருந்த மனத்தையுடைய என்னை. நைவிப்பான்-வருத்துதற் பொருட்டு. இவ்வாறு கூறினாளாயினும், ‘ஒருவர் குறிப்பும் இன்றித் தன்னியல்பில் உண்டாயிற்று’ என்பதே கருத்தாம். ‘‘நையாத, நைவிப்பான்’’ என்றவற்றில், ‘நைதல்’ என்பது, காதற் பொருளில் இவ்வாறு, ‘வருந்துதல்’ குறித்ததாயினும், உண்மைப் பொருளில், ‘உருகுதல்’ என்னும் பொருளையே குறிக்கும். ‘அருள் செய்யாயோ‘ என மாற்றிக்கொள்க. இத்திருப்பாடலும் தலைவி கூற்று. 124. இது முதலாக வரும் திருப்பாடல்கள் செவிலி கூற்றாம். அம் பளிங்கு பகலோன்பால் அடை பற்றாய்-அழகிய பளிங்குக்கல் கதிரவனிடம் அடைந்த நிலையைப்போல ; அஃதாவது, ‘பளிங்குக் கல்லினது இயற்கை யொளியும், அடுத்தது காட்டுந் தன்மையும் கதிரவன் தோன்றியபொழுது அவன் முன்பே விளங்குதல்போல’ என்றதாம். இவள் மனத்தில் முன்பு அளிந்த காதலும் நின் முகந்தோன்ற விளங்கிற்று-இவள் உள்ளத்தில் இயற்கையாகவே முன்பு மிகுந்திருந்த விருப்பம் (உன்னையே மிக விரும்பும் இவளது இயற்கை) உன்னுடைய முகம் தோன்றிய காலத்தில் அதன் முன்பே வெளிப்பட்டது. இறைவனை அடைதலே உயிர்கட்கு இயற்கையாதலும், அவ்வியற்கை ஆணவத்தின் செயலால் திரிக்கப்படுதலாலே அவை உலகை நோக்கிச் செல்லும் செயற்கையை உடையவாதலும், ஆணவத்தின் சத்தி மெலிந்தொழிந்தபொழுது உயிர்களின் இயற்கைத் தன்மை வெளிப்படுதலும் ஆகிய உண்மைகள் |