140. தத்தை-கிளி. அங்கனையார் - மாதர். ‘தத்தைபோலும் அங்கனையார்’ என்க. தயா-இரக்கம் ; என்றது அன்பை. ‘அதில்’ என்பது, ‘‘அத்தில்’’ என விரித்தல் பெற்றது. ‘அங்ஙனம் கூறிடப்பட்ட அன்பில்’ என்பது பொருள். அங்கு அசைநிலை. ஒருகூறு-ஒருகூறாய அன்பினை, ‘பெருமையை’ என, இரண்டாவது விரிக்க. பிழைத்தவை-அவர்கள் பிழைபடச் செய்த செயல்களை ; இது ‘பித்தன்’ எனக் கூறியதைக் குறியாது பிறவற்றையே குறித்தல், ‘‘பிழைத்தவை’’ என்ற பன்மையானும் பெறப்படும். ‘‘செய்யும்’’ என்ற பெயரெச்சம். ‘‘கைத்தலம்’’ என்ற கருவிப்பெயர் கொண்டது இக்கைத்தலம் அபய கரம். ‘‘கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த’’ என்ற இதனானும் இறைவன் இவ்வாசிரியர்க்கு ஆசிரியனாய் வந்து அருளினமை அறியப்படும். 141. பண்ணிய - மூட்டிய தழல் காய் - நெருப்புச் சுடுகின்ற (நெருப்பாற் சுடப்படுகின்ற). ‘‘காய் பால்’’ என்பது செயப்படு பொருட் கண் வந்த வினைத்தொகை. அளாம் - முன்பு கலக்கப்பட்ட. ‘‘பறைந்து’’ எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ‘‘நீர்போல்’’ என்றார். ‘நீர் பறைவது போலப் பறைந்து’ என்பது பொருளாயிற்று. ‘நெருப்பு மூட்டிக் காய்ச்சப்பட்ட பாலில், முன்பு கலந்திருந்த நீர் ஆவியாய் விரைவில் நீங்கிவிடப் பின்பு நிலைத்து நின்று பயன் செய்யும் பால்போலும் புண்ணியம்’ என்பது, இங்குக் கூறப்பட்ட |