உணவு. ‘போர்வை கரிஉரி, கவந்திகை திரிந்தூண்’ என நிரல் நிறையாகக் கொள்க. திரிந்து ஊண்- அலைந்து ஏற்கும் உண்டி. தழல் உமிழ்-கண்ணால் நெருப்பைச் சிந்துகின்ற ; என்றது ‘சீற்றத்தையுடைய’ என்றபடி. பளிங்கு-படிகமணி. ‘சாட்டியக்குடியார் ஓம்பு அழல், விளக்கு என்க. இழுது நெய்-வெண்ணெயை அப்பொழுது உருக்கிக்கொண்ட நெய். ‘பணிகேட்டுச் சூழ்பவர் அயன் முதலிய தேவர்களும், அறிய மாட்டாது ஆய்ந்து தொடரும் நூல்கள் வேதங்களும் ஆகிய பெருமைகள் காணப்படினும், அவன் உறைவிடம் சுடுகாடு முதலியவையாய் உள்ளன ; இஃது அறிதற்கரிதாய் இருந்தது’ என்றவாறு, இங்கும், ‘உறைவிடம் கரிகாடு ; கோவணம், அரவம்; சபவடம் பளிங்கு ; விளக்கு அழல்’ என மாற்றுக. ‘‘பளிங்கு’’ என்றது, மாணிக்கம் முதலிய பிற இரத்தினங்களல்லாமையை உட்கொண்டது. 155. பதிகம்-(தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர்-கந்தருவர்; இசை பாடுவோர். கதியெலாம் அரங்கம்-அவர் சேரும் இடமாவன எல்லாம் அம்பலம். பிணையல் மூவுலகு-மாலைபோல அமைந்த மூன்றுலகங்கள் ‘மூவுலகிலும்’ என உம்மை விரித்து, ‘மூவுலகிலும் ஒலிசெயும்’ என முடிக்க, சதியில்-அடிபெயர்த்தலில், ஆர்கலியில்-கடலைப்போல. ‘ஆர்கதியில்’ என்பது பாடம் ஆகாமை யறிக. கமல வர்த்தனை-பதுமநிதி. உள்ளத்தில் உள்ள அன்பையே தாம் விரும்பும் பொருளாகக் கொள்ளுதலின், சாட்டியக்குடியாரது இதயங்களை இவ்வாறு கூறினார். ‘வர்த்தனை ஆசனம் ’ எனவும் உரைப்பர். |