புறக்கணிப்பாகக் கையாளார்’ என்பதாம், முதுசொல்-பழமொழி, ‘இறைவன் தம்மைப் புறக்கணித்துவிட்டான்’ என்னும் கருத்தினால் ’ அம்முதுசொல் எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவிலே அறிந்தொழிந்தேன்’ என்றார். ‘‘சொல்லும்’’ என்னும் உம்மை, சிறப்பு. ‘‘அறிந்தொழிந்தேன்’’ என்பது ஒருசொல் நீர்மைத்து, வம்பு ஆனார் பணி உகத்தி-புதியராய் வந்து அடியராயினாரது தொண்டினையும் விரும்புகின்ற நீ ‘பணியும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி அடியேன் தொழில் இறையும் நம்பாய்- வழியடியேனாகிய எனது தொண்டினைச் சிறிதும் விரும்பவில்லை. 207. ‘நிறைகுளம் கீழ்க்கொம்பு பொசியாதோ’ என மாற்றி, ‘கொம்பிற்கு’ என உருபு விரிக்க. ‘ஏரி நிரம்பினால் அடைகரை பொசியும்’ என்பது பழமொழி. பொசிதல்-கசிந்து ஊறுதல். ‘ஏரி நிறைந்தபொழுது மதகின் பாய்ச்சலால் வளரும் பயிர்களே யன்றி, அடை கரையில் முளைத்துள்ள செடிகளும் ஊற்றுப் பெற்று வளரும்’ என்பது இப்பழமொழியின் பொருள். ‘‘ போல’’ என்றதன்பின், ‘‘ என் திறத்தும், நசையானேன்’’ என்பவற்றை முறையே கூட்டுக. ‘‘என் திறத்தும் நசையானேன்’’ என்றது, என்னளவிலும் நினைந்து (சிவபெருமான் அருள் வழங்குவான் என்று கருதி, அவனிடத்து விருப்பமுடையவனாயினேன். இதன்பின், ‘ஆயினும்’ என்பது வருவிக்க. திசைநோக்கி- அவன் வரும் திசையைப் பார்த்து, பேழ்கணித்து-மனம் வருந்தி; ‘ஆகாயத்தை நோக்கி’ என்றவாறு. சிவபெருமான் ஓ எனினும்-சிவபெருமானே முறையோ என்று முறையிட்டாலும், இசையான்-(என்னை ஆளாக உடையானாகிய அவன்) வர இணங்கவில்லை. ‘எனை உடையாளும்’ என உம்மை விரித்து, ‘என்னை ஆளாக உடையாளாகிய உமையம்மையும் எனக்கு முன்வந்தருளுமாறு அவனுக்குச் சொல்லவில்லை’ என உரைக்க. ‘இனி யான் என்செய்வேன்’ என்பது குறிப்பெச்சம். ‘‘நம்பானே’’ என்றதில் ஏகாரம் ஈற்றசை. |