நிற்பின் இதனைப் பெறலாம், அதனைப் பெறலாம் என்னும் அவாவும். உறவும்-செவிலியும், தோழியும் முதலாய கிளைஞரும். ‘‘உடன் பிறந்தவரோடும்’’ என்ற உம்மை சிறப்பு. ‘அறிவு முதலாகத் தந்தை ஈறாகச் சொல்லப்பட்ட அஃறிணையும், உயர்திணையுமாகிய யாவும், யாவரும் உடன்பிறந்தவரோடும் தம்மிடத்தே பிரிந்து நிற்குமாறு அவர்களை விட்டு உன்னை அடைந்தேன்’ என்க. உடன்பிறந்தவர் பின்றொடர்ந்து வந்தும் மீட்டுச் செல்லற்கு உரியராதலின், அவரைத் தனியே பிரித்து ஓடுவும், உம்மையும் கொடுத்துக் கூறினாள். இது. பெருந்திணையுள். ‘மிக்க காமத்து மிடல்’ என்னும் பகுதியுள், ‘கணவன் உள்வழி இரவுத் தலைச்சேறல்’என்னும் துறை. உண்மைப் பொருளில் இஃது உலகியலை முற்றத் துறந்து இறைவனையே புகலாக அடைந்தமையைக் குறிக்கும். 234. வான நாடு-சிவலோகம். மைந்தன்-பேராற்றலுடையவன். ‘வானநா டுடையவனாயினும் என் பொருட்டு இங்கு வந்து அருள்’ என்றவாறு. பால், நெய் முதலிய ஐந்தையும் ஒருங்கு ஆடிய’ என்க. ஏன மா-பன்றியாகிய விலங்கு; இருபெயரொட்டு. அதனது மருப்பே இறைவன் மார்பில் அணியாய் நிற்றலின், ‘ஏனமாப் பூண்’ என்றார். மணி-அழகு. இது தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம். |