பக்கம் எண் :

1
 

ஓம்
திருச்சிற்றம்பலம்
திருமூலர்
திருமந்திரம்

1. பொதுப்பாயிரம்
1. கடவுள் வாழ்த்து

1. ஒன்றவன்1தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன்2ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே

(ப. இராமநாதன்)இத்திருமுறை முழுமுதற் சிவபெருமானின் எண்பெருங் குணங்களையும் முறையே குறிக்கும் அருங்குறிப்புமாகும். மேலும் சிவபெருமான் உலகப் பெரும் தோற்றத்துக்கு முன்னும், உலகப் பேரொடுக்கத்துக்குப் பின்னும், நிலைத்திருக்கும் அழிவிலா ஒருவன். அவன் இனிய அருள் 'சிவய நம' என்னும் திருவைந்தெழுத்திற் காணப்படும் வகரமும் நகரமும் ஆகிய இரண்டெழுத்துக்குரிய வனப்பு (பராசத்தி) நடப்பு (ஆதிசக்தி) என இரண்டாகும். அன்பு அறிவு ஆற்றல் என மூன்றாகும். இவற்றை இச்சை ஞானம் கிரியை எனவும் இசைப்பர். சிவசிவ எனப் பொருள்மறை நான்காகும். படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் அருளல் எனத் திருவருட்டொழில் ஐந்தாகும். அவன் திருவடியைச் சேர்ப்பிக்கும்படி முறை வழிகள் தொகை வகையால் ஆறாகும். எழுவகை யாற்றலுக்கும் அப்பாற்பட்டவன். எழுவகை ஆற்றல் தமிழாகம விரிவாகிய சிவஞான சித்தியாரில்3அருளியபடி சத்தி, விந்துசத்தி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி என்பர். நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று) விசும்பு, நிலா, பகலோன், புலனாய மைந்தன்4என எண்வகைப் பொதுவடிவங்களாகும்.


1. ஒன்றென்ற சிவஞானபோதம், 2. 1 - 2.

2. வென்றா. அப்பர். 5. 98 - 7.

3. சத்தியாய். சிவஞானசித்தியார், 2. 4 - 3.

4. நிலம்நீர். திருவாசகம், திருத்தோ - 5.