பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை928

96.கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் - புனை கனகத்

97.தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து, மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த

98.கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ - ஏயும்

99.தமனியத்தின் தாழ்வடமும், தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி - அமைவுற்ற

100.வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து, மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து, திண் நோக்கில்

101.காற்றுருமோ, குன்றோ, கடலோ, அடல்உருமோ,
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்


கண்ணி - 96 - 100 அணிகல வகைகளும், ஆடையும், மணியின் ஆரம் - இரத்தின வடம். கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து. சுரிகை - வளைவு. தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப் பட்டது என்க. கண்டிகை - உருத்திராக்கம். ‘பூண்பித்து’ என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, “பூண்டு” என வந்தது. கேயூரம் - தோள்வளை; கடகம். வாய்மை பெற நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல். இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும். தமனியம் - பொன். தாழ்வடம் - மார்பிற்குக் கீழே வயிற்றளவும் தாழ்ந்து அசையும் வடம். இது, ‘தாவடம்’ என மருவி வழங்குகின்றது. தரளக் கோப்பு - முத்து மாலை. சிமய வரை - சிகரத்தை உடைய மாலை. இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது. ‘வரை போலும் மார்பு’ - என்க. அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப்பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி. ஒள் நூல் - பட்டிழை. கலிங்கம் - ஆடை. “புனைவித்து” (95) என்பது முதல், “புனைந்து” (100) என்பது முடிய வந்த ‘செய்து’ என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) “புனைந்து” - என்பதை, ‘புனைந்த பின்’ எனத் திரித்துக் கொள்க.

கண்ணி -101 - 109 உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.