பக்கம் எண் :

மூலமும் உரையும்163



7-10: முனிவர்........................போல்

     (இ-ள்) முனிவர் மனமும் கண்ணும் ஏம் உறக் கனிய-பதஞ்சலி முதலிய முனிவருடைய மனமும் கண்ணும் இன்பமுறுதலாலே கனியும்படி; வெள்ளியம் பொதுவில் குனிக்கும்-வெள்ளியாலியன்ற அழகிய மன்றத்தில் கூத்தியற்றும்; புதிய நாயகன் பழமறைத் தலைவன்-பின்னைப் புதுமைக்கும் புதுமையுடைய தலைவனும் பழைய மறைகளுக்கு முதல்வனும் கைஞ்ஞின்றவன்-ஒழுக்கத்தே நின்றவனும் ஆகிய இறைவனுடைய; செம்கால் கண்டனர்போல-சிவந்த திருவடிகளைக் கண்ணுற்ற மெய்யடியார் தமக்குத்தாமே உவமையாயினாற்போல என்க.

     (வி-ம்.) முனிவர்-பதஞ்சலி முதலியோர். முனிவர் மனமும் கண்ணும் ஏமுறக் கனியா என மாறுக. பொது-மன்றம். குனிக்கும்-கூத்தியற்றும். புதுமைக்கும் புதுமையானவன் என்பார் புதிய நாயகன் என்றார். பழமைக்கும் பழமையானவன் என்பார் பழமறைக்கும் தலைவன் என்றார். கை-ஒழுக்கம். ஞின்ற: போலி. கால்கண்டவர்-தமக்குத் தாமே உவமையாயினாற்போல என விரித்தோதுக.

11-13: விளக்கமும்............................இருந்தன

     (இ-ள்) விளக்கமும் புதுமையும் அளப்புஇல் காட்சியும்-ஒளியினாலும் புதுமையினாலும் எண்ணப்பட்டாத காட்சியாலும் தமக்குத் தாமே யொப்பாய்; வேறு ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்-தமக்கு வேறு உவமை எடுத்துக் கூறுவது இல்லாமையும் உடையவாய்; அறிவோர் காணும் குறியாய் இருந்தன-பெரியோர் காணுதற்குரிய இலக்காய் இருந்தன என்க.

     (வி-ம்.) அளப்புஇல் காட்சி-அளந்து காணப்படாத அழகு, அழகுக்கு எல்லை இன்றாகலின் இங்ஙனம் கூறினார். குறி-இலக்கு. விளக்கத்தாலும் புதுமையாலும், காட்சியாலும் என்பன உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி இஃது ஏதுவொடு கூடிய பொது நீங்குவமை. விளக்கமும்....................நீக்கமும் என்பதுவரை பொருளுக்குக் கூறிய அடை மொழியைக் கண்டனர் என்னுமுவமைக்கும் இயைத்துக் கொள்க. நீக்கமும் உடையவாய் என ஒரு சொல் வருவித்துக் முடிக்க. இனி இத்தழைகள் மணவணிப்பக்கம் கட்புலங்கொண்ட இப்பணியளவும் அறிவோர் காணும் குறியாய் இருந்தன என வினை முடிவு செய்க. இஃதென் சொல்லியவாறோவெனின் என்பெருமான் கொடுத்த தழை விளக்கமும் புதுமையும் காட்சியும் ஒப்புக் கூறுவது நீக்கமும் உடையராய் வாடாது இருந்தன. அங்ஙனம் இருந்தவற்றால் எம்பெருமாட்டி அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு இத்திருமணச் சடங்கு நிகழுந்துணையும் ஆற்றி இருந்தனள் என்று தான் அத்தழை ஏற்ற முழுத்தத்தைத் தன்னுட் கூறிக் கொண்டாடிய படியாம். மெய்ப்பாடும் பயனும் அவை.