பக்கம் எண் :

376கல்லாடம்[செய்யுள்47]



26 - 29: கோமகன் . . . . . . . . . . முகில்

     (இ-ள்) கோமகன் அடிக்க - பாண்டியன் சினந்து பிரம்பாலடிக்க; அவன் அடி வாங்கி - அவன் அடியை முதுகில் ஏற்று; அ அடி - அந்த அடியை; எவ்வுலகு எவ்வுயிர் எத்துறைக்கு எல்லாம் கொடுத்த - எந்தவுலகத்திற்கும் எல்லா வுயிர்களுக்கும் எவ்வகைக் கருவினுக்கும் முழுதுமாகப் படும்படி செய்தருளிய; அருள்நிறை நாயகன்- அருள் நிறைந்த தலைவனும் ஆகிய சோமசுந்தரக் கடதவுளினது; திருமிடற்று இருள் என்ன - அழகிய மிடற்றின்கண் அமைந்த இருள்போல இருண்டு; செறிதரும் மாமுகில் -நெருங்கி வந்த பெரிய முகிலே! என்க.

     (வி-ம்.) கோமகன் - ஈண்டுப் பாண்டிய மன்னன். பாண்டியன் கூலியாளாய் வந்த இறைவனைப் பிரம்பால் அடித்தபொழுது அவ்வடி எல்லா உலகினும் எல்லாவுயிர்களுக்கும் எவ்வகைக் கருவினுக்கும் பட்டது என்பதனை,

"வானவர் மனிதர் நரகர்புள் விலங்கு மாசுணஞ் சிதலெறும் பாதி
ஆனபல் சரமு மலைமரங் கொடிபுல் லாதியா மசரமும் பட்ட
ஊனடை கருவும் பட்டன தழும்போ டுதித்தன வுயிரிலோ வியமுந்
தானடி பட்ட சராசர சடங்க டமக்குயி ராயினோன் றழும்பு"
                             (திருவிளை. மண்சுமந்த - 55)

எனவரும் பரஞ்சோதி முனிவர் வாக்கானும் உணர்க. சடைப்பொருமானும் அருள்நிறை நாயகனுமாகிய இறைவனது மிடற்றிருள்போல இருண்ட முகிலே என்க. முகில்: அண்மை விளி.

30 - 31: எனது . . . . . . . . . . புரிந்தே

     (இ-ள்) எனதுகண் கடந்து நீங்கி - எனது கண்ணைக் கடந்துபோய்; ஒருங்குபு புரிந்து - ஒன்றாய்க் கூடி; துனைவுடன் செல்லல்-என்னைக் காட்டிலும் நீ விரைந்து செல்லற்க, அங்ஙனம் செல்லின் அவள் ஒரோவழி இறந்துபடுதலுங் கூடும் என்க.

     (வி-ம்.) எனவே என்னோடு வருக. என்னினும் முநது செல்லற்க என்றானாம். அங்ஙனம் செல்லின் அவள் ஒரோவழி இறந்து படுதலுங்கூடும் என்பது குறிப்பெச்சம்.

     இனி, இதனைச் சிந்திப்பரப்பி விம்மத்தூவிச் சொற்று, நகர் முன்றிலில், நீர்க்காலும், உழுநரும், வளைச்சாற்றும், குருகினமும், பகடீர்க்குநரும், அறுகாற் கிளியும், தாவித் திமிர்ப்பக் கொடுக்கும் நீர்க் கூடற் பெருமான், மாதவன்போல வரும் வையைக் கூலஞ்சுமக்க ஆளாகிக் கூலிகொண்டு அடிவாங்கி அவ்வடி கொடுத்த நாயகன், மிடற்றிருளெனச் செறிதரு முகிலே! கண்கடந்து நீங்கி மடந்தைக்குத் துயரீந்து, துயில் வாங்கிய இன்னல் காண்பான், புரிந்து சொல்லலென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.