|
1 - 7: இலவு....................வேதியன்
(இ-ள்)
இலவு அலர் தூற்றி அனிச்சம் குழைத்து தாமரை குவித்த காமர் சிறு அடி-இலவ மலரைப் பழித்து
அனிச்சமலரை வாடச்செய்து தாமரைப்பூவைக் குவியச்செய்த அழகிய சிறிய காலையுடைய; திருவினள்-செல்வியே!;
ஒரு நகை அரிதினிற் கேண்மோ-நகைத்தற்குரிய ஒரு நிகழ்ச்சியை அருமையாகக் கேட்பாயாக;
எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும்-உலகங்களெல்லாம் தன்பால் தோன்றும்படி தான்
போக்கு வரவற்றிருந்த காட்சியும்; தன் உள்தோன்றி தான் அதில் தோயாத தனி நடை
நிறையும்-எப்பொருளும் தன்னிடத்திருந்து தோன்றிஇராநிற்பவும் தான்மட்டும் அப்பொருளில்
தோயாத தனித்த ஒழுக்கத்தையுடைய நிறைவுடைமையும்; ஒரு தனி கோலத்து-ஒப்பில்லாத ஒரே
வடிவில்; இருவடிவு ஆகி-அம்மையும் அப்பனுமாகிய இரண்டு வடிவம் பெற்று; பழமறை வேதியன்-பழமையான
வேதப்பொருளாய் உள்ளவன் என்க.
(வி-ம்.)
இலவமலரும் அனிச்சமலரும் தாமரைமலரும் தோழியுன் சிற்றடி நிறத்திற்கும் மென்மைக்கும்
அழகிற்கும் தோற்றன என்பது கருத்து. காமர்-அழகு. திருவினள்-செல்வி: அண்மைவிளி.
திருவினள் என்றது தொழியை. எல்லாம் என்பது உயிர்ப்பொருளும் உயிரில்பொருளும் ஆகிய
இருவகைப்பொருளும் கலந்த உலகமெல்லாம் என்றவாறு. இருந்த தோற்றம்-தான்மட்டும் போக்குவரவின்றி
எங்கும் நிறைந்திருந்த காட்சி என்றவாறு. தன்னுள் தோன்றியும் என உம்மை விரித்தோதுக.
அதில் என்புழி அது சாதியொருமை. அதில் தோன்றுதல்-அதனைப்பற்றியிருத்தல். தனிநடை-தனக்கே
சிறந்துரிமையுடைய ஒழுக்கம். நிறை-நிறைவு. அஃதாவது அங்கிங்கெனாதபடி யெங்கும் நிறைந்திருத்தல்.
இருவடிவு-அப்பனும் அம்மையுமாகிய இரண்டு வடிவங்கள். வேதியன்-வேதப்பொருளாய் உள்ளவன்.
8 - 9: நான்மறை.........................மான
(இ-ள்)
நால்மறை தாபத முத்தழல் களம்புக்கு-நான்கு வேதங்களையும் உணர்ந்த இருடிகளினுடைய மூன்றுவகைத்
தீயினையுடைய வேள்வியில் புகுந்து; அரக்கர் துய்த்து உடற்றும் அதுவே மான-அரக்கர்கள்
ஆங்குத் தேவர்களுகிடும் அவியுணவை உண்டழிக்கின்ற அந் நிகழ்ச்சியே போல என்க.
(வி-ம்.)
நால்மறை-இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன. தாபதர்-தவவொழுக்கமுடையோர்.
நான்மறைத்தாபதர் முத்தழல்களம் என்புழிச் செய்யுளின்ப முணர்க. முத்தழற்களம் என்றது
வேள்விச்சாலையை. முத்தழல், மூன்றுவகைத் தீ. அவை: ஆகவனீயம், தக்கணாக்கினி, காருகபத்தியம்
என்பன.
|