பக்கம் எண் :

304 திருமுறைத்தலங்கள்


78/24. எதிர்கொள்பாடி

மேலைத்திருமணஞ்சேரி

      சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் மேலைத் திருமணஞ்சேரி என்றாயிற்று. இன்று
இப்பெயர் சொல்லிக் கேட்டாலும் பெரும்பாலான சாதாரண மக்களுக்குத்
தெரியவில்லை. கீழைத் திருமணஞ்சேரிதான் பிரசித்தமாகவுள்ளது.
மக்களுக்கும் தெரிகிறது.

     1) குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் செல்லும் பேருந்துச் சாலையில்
வந்து “அஞ்சார் வார்த்தலை” என்னும் ஊரையடைந்து ; வாய்க்கால் பாலம்
தாண்டி, (இடப்புறமாகப் பந்தநல்லூர்சாலை செல்ல) நாம் வலப்புறமாகத்
திரும்பி, திருமணஞ்சேரி சாலையில் சென்றால் முதலில் வரும் ஊர்
மேலைத்திருமணஞ்சேரி ஆகும். இவ்வூருள் நுழைந்ததும் வலப்புறமாகச்
சென்றால் இக்கோயிலைத் தரிசிக்கலாம். இதை மேலக் கோயில் என்று
கேட்டால்தான் சொல்வார்கள். இத்திருக்கோயில் பலருக்கும் தெரிவதில்லை.

     இதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி
(கீழைத் திருமணஞ்சேரி)
உள்ளது.

     2) மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகத் திருமணஞ்சேரிக்கு
நகரப் பேருந்து செல்கிறது. கோயில்வரை வாகனங்கள் செல்லும்.

     வேள்விக்குடியில் திருமணஞ் செய்துகொண்டு அத்திருமணக்
கோலத்துடன் வந்த தன் அடியவனான அரசகுமாரனை அவனுடைய
அம்மானைப்போல இறைவன் வந்து எதிர்கொண்டழைத்துச் சென்றமையால்
இத்தலம் எதிர்கொள்பாடி என்றாயிற்று.

     (இப்பெயர் பண்டைக் காலத்தில் ‘எருதுபாடி’ என்று திரிந்து
வழங்கியதாகவும் செய்தியொன்று தெரிவிக்கிறது.) ஐராவதம் வழிபட்டது.

     இறைவன் - ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்
     இறைவி - சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல்மாது

     சுந்தரர் பாடல் பெற்றது.