பக்கம் எண் :

414 திருமுறைத்தலங்கள்


119/2. கடம்பந்துறை

கடம்பர் கோயில், குழித்தலை -
குளித்தலை.

     சோழநாட்டுத் தென்கரைத் தலம்.

    தற்போது கடம்பர் கோயில், குழித்தலை, குளித்தலை என
வழங்கப்படுகிறது. கல்வெட்டில் ‘குளிர்த் தண்டலை’ என்று காணப்படுகிறது.
புகைவண்டி நிலையம். திருச்சி ஈரோடு பாதையில் உள்ளது. கண்வ
முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம்.

    இறைவன் - கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதர்
   
இறைவி - பாலகுஜாம்பாள், முற்றிலாமுலையாள்.
    தலமரம் - கடம்பு
    
தீர்த்தம் - அருகில் உள்ள காவிரி.

    அப்பர் பாடல் பெற்றது.

   கோயிலுள் நுழையும் போது அம்பாள் சந்நிதி உள்ளது. இதைத்
தாண்டித்தான் மூலவரைத் தரிசிக்கச் செல்லவேண்டும். மூலவர் அழகான
சிவலிங்கத் திருமேனி. சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம்
நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின்
உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. விநாயகப் பெருமான்
இடம்மாறி, மறுகோடியில் உள்ளார். உள் பிராகாரத்தில் அறுபத்து
மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள் உள்ளன. இத்திருக்கோயிலில் இரு
நடராஜ வடிவங்கள் உள்ளன. ஒன்றில் முயலகன் இருக்க, மற்றொன்றில்
இல்லை.

     ‘பூமென் கோதையுமை யொரு பாகனை
     ஓமம் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்
     காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
     நாம மேத்த நந்தீவினை நாசமே.’            (அப்பர்)

     அழுகு திரிகுரம்பை ஆங்கது விட்டாவி
     ஒழுகும் பொழுதறிய ஒண்ணா-கழுகு
     கழித்துண்ட லையாமுன் காவிரியின் தென்பால்
     குழித் தண்டலை யானைக் கூறு.’
                                   (ஐயடிகள் காடவர்கோன்)