பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 437


128/11. திருப்பூந்துருத்தி

      சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில்
கண்டியூரை அடுத்து உள்ள தலம். மக்கள் வழக்கிலும் - அஞ்சல் பெயர்
வழக்கிலும் திருப்பந்துருத்தி என்று வழங்குகிறது. கோயில் உள்ள பகுதி
மேலத்திருப்பூந்துருத்தி ஆகும். திருவையாற்றிலிருந்தும் செல்லலாம்.
திருக்கண்டியூரிலிருந்து 3 கி.மீ. தொலைவு.

     ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் “துருத்தி” என்று பெயர் பெறும்.
இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர்
பெற்றது. (மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தலமும் (குத்தாலமும்)
துருத்தி என்று வழங்கப்படுகிறது.) இந்திரன், திருமால், இலக்குமி, சூரியன்,
காசிபர் ஆகியோர் வழிபட்ட தலம்.

     சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. ஏழூர் திருவிழா நடைபெறும்
தலங்களுள் இதுவுமொன்று. “பூந்துருத்தி காடவநம்பி”யின் அவதாரத் தலம்.
இத் தலத்தில் நந்தி விலகியுள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த
தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற
ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத்
தலபுராணம் கூறுகிறது. ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான்
தன்தோளிற் சுமந்ததலம். இவ்விடம் சம்பந்தர்மேடு என்று சொல்லப்படுகிறது.
திருவாலம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு
உள்ளது. அங்கு இருவருக்கும் கோயில் கட்டப்பட்டு, விழா நடைபெறுகிறது.

     அப்பர் அமைத்த - “திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்” என்று
புகழப்படும் திருமடம் உள்ள தலம். இத் திருமடம் கோயிலுக்கு எதிரில்
சற்றுத் தள்ளி உள்ளது. ஊர் பெரியது. மேலை, கீழை என இரு
பிரிவாகவுள்ளது. மேலைப் பூந்துருத்தியில்தான் கோயில் உள்ளது.

     இறைவன் - புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்
     
இறைவி - சௌந்தரநாயகி.
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - சூரிய தீர்த்தம்.

     அப்பர் பாடல் பெற்றது.

     ராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே
நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம். பெரிய நந்தி விலகியுள்ளது.