பக்கம் எண் :

516 திருமுறைத்தலங்கள்


157/40. திருவிளநகர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் பொறையாறு சாலையில் 6 கி.மீ.
தொலைவில் உள்ளது. பேருந்து செல்கிறது. அருள்வித்தன் என்னும்
அந்தணன் நாடொறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும்
தொண்டினைச் செய்து வந்தான். இவனுக்கு அருள விரும்பிய இறைவர்,
ஒருநாள் அவன் தன் தொண்டில் நின்று ஆற்றைக் கடக்கும்போது,
வெள்ளம் பெருகி, வாயளவாய் பெருகிட, அப்போதும் அவ்வந்தணன்
மலர்க் கூடையை இருகைகளால் நீந்த முடியாமலும், மலர்க் கூடையை
விடாமலும், பற்றியவாறே விரைந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய
உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து
துறைகாட்டி அவனைக் கரையேறச் செய்தார். பின்னர், திருஞானசம்பந்தர்
‘திருக்கடைமுடி’ வணங்கி, மயிலாடுதுறை வந்து மயூரநாதரை வணங்க
விரும்பி, ஆற்று வெள்ளங்கண்டு அஞ்சி, கடக்கமுடியாது வருந்தி நின்று;
‘துறை காட்டுவார் எவரேனும் உளரோ’ என்று உள்ளத்து உன்னினார்.
அப்போது இறைவனே வேடனாக வந்து தோன்றித் தாம் அழைத்துப்
போவதாகச் சொல்லி அழைத்துச் சென்றான். காவிரி வெள்ளமும்
ஞானசம்பந்தரின் பாதத்து அளவே ஆயிற்று. கரையேறிய ஞானசம்பந்தர்,
தன்னை அழைத்து வந்த வேடன் மறைந்தது கண்டு அதிசயித்து, வந்தவர்
இறைவனே என்றுணர்ந்து, ‘துறைகாட்டும் வள்ளலோ’ என்று வணங்கிப்
போற்றினார். இவ்வரலாற்றை ஞானசம்பந்தர் தேவாரம் நன்கு விளக்கும்.

     இறைவன் - துறைகாட்டும் வள்ளல், உசிரவணேஸ்வரர்
     இறைவி - வேயுறுதோளி
     தீர்த்தம் - மெய்ஞ்ஞான தீர்த்தம்
     சம்பந்தர் பாடல் பெற்றது.

     ஊருக்கு ‘விழல்’ என்று பெயர். இதுவே பின்னர் (விழல் நகர்)
விளநகர் என்றாயிற்று. உசிரம் : விழல்.

     கபித்தன் என்னும் மன்னன் வழிபட்டுப் பிரமகத்திதோஷம் நீங்கப்
பெற்ற தலம்.