பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 653


210/93. தலையாலங்காடு.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருவாரூர் - கும்பகோணம் பேருந்துச் சாலையில் தலையாலங்காடு
அடைந்து (18 கி.மீ.), வாய்க்கால்கள் இரண்டைக் கடந்து சென்றால் கோயிலை
அடையலாம். முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன்
நடனமாடிய தலம். கபிலமுனிவர் வழிபட்டது. சங்க காலத்தில் இவ்வூர்
தலையாலங்கானம் என்னும் பெயரில் விளங்கியது. தலையாலங்கானப்
போரும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் பெயரும்
அனைவரும் அறிந்ததே.

     இறைவன் - நடனேஸ்வரர், ஆடவல்லநாதர்
     இறைவி - உமாதேவி

     அப்பர் பாடல் பெற்றது.

     கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது.
இதில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால்
வெண்குஷ்டநோய் நீங்கப்பெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத
நம்பிக்கையாகும். சிறிய ஊர். கோயில் தெற்கு நோக்கியது. சுவாமி அம்பாள்
கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சந்நிதியில் விநாயகர், விசுவநாதர்,
தலவிநாயகர், முருகன், பைரவர், நால்வர் சந்நிதிகள் உள்ளன. மூலவர்
அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதி. இக்கோயில் ‘எண்கண்’
கோயிலுடன் இணைந்தது. அருகாமையில் எண்கண், குடவாயில், பெருவேளூர்
முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத்
தலங்களும் உள்ளன.

    
 “மெய்த்தவத்தை வேதத்தை வேதவித்தை
          வியங்குகள மாமதிசூடும் விகிர்தன் தன்னை
     எய்த்தவமே யுழிதந்த ஏழையேனை
          இடர்க்கடலில் வீழாமே ஏறவாங்கி
     பொய்த்தவத்தவர் அறியாதநெறி நின்றானை
          புனல் கரந்திட்டு உமையோடு ஒருபாக நின்ற
     தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
          சாராதே சாலநாள் போக்கினேனே.”       (அப்பர்)