பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 841


     பண்டு நால்வருக்கு அறம் உரைத்தருளிப் பல்லுல கினில் உயிர்
                                                வாழ்க்கை
     கண்ட நாதனார் கடலிங்கை தொழக்காதலித் துறை கோயில்
     வண்டு பண்செயுமாமலர்ப் பொழின் மஞ்சை நடமிடு மாதோட்டம்
     தொண்டர் நாடொறும் துதிசெய அருள்செய் கேதீச் சரமதுதானே.
                                             (சம்பந்தர்)

     அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
     வங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில்
     பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
     தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே"    (சுந்தரர்)

                                   -“வேட்டுலகின்
     மூதிச் சரமென்று முன்னோர் வணங்கு திருக்
     கேதீச் சரத்திற் கிளர்கின்றோய்.”             (அருட்பா)

275. திருஇடைவாய்

திருவிடைவாயில் / இடவை

     சோழநாட்டுத் தென்கரைத் தலம்.

     தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியிலிருந்து கூத்தா நல்லூர் செல்லும்
பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் என்னும்
வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை யடையலாம்.

     இஃது புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருமுறைத்தலம். மேடு ஒன்றினை
வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் குடியிருந்ததாகவும், அதைத்
தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய ஞானசம்பந்தர்
தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

     கி.பி. 1917ல் கண்டெடுக்கப்பட்ட இத்தலத்தை “ஐயடிகள் காடவர்கோன்
தம்முடைய க்ஷேத்திரக்கோவையில் தென்இடைவாய்” என்று
குறிப்பிட்டுள்ளார்.

     இறைவன் - இடைவாய் நாதர், விடைவாயப்பர், புண்ணிய
              கோட்டீஸ்வரர்
     இறைவி - உமையம்மை, அபிராமி.