பக்கம் எண் :

906 திருமுறைத்தலங்கள்


9. தஞ்சை இராசராசேச்சரம்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்

     தஞ்சாவூர் - மாவட்டத் தலைநகரம்.

     சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பேருந்து
வசதிகள் உள்ளன. சென்னை-இராமேஸ்வரம் இருப்புப்பாதை - மெயின்
லைனில் (Main line) உள்ள சந்திப்பு நிலையம். சோழர்க்குத் தலைநகராக
விளங்கிய பதி.

     தஞ்சகன் ஆண்ட ஊராதலின் தஞ்சகனூர் என்பது தஞ்சாவூர்
என்றாயிற்று என்பது தலவரலாறு.

     தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் - பெருவுடையார் கோயிலே
இராசராசேச்சரம் என்பதாகும்.

     முதலாம் இராசராசசோழனால் கட்டப்பட்டதாதலின் இராசராசேச்சரம்
எனப்பட்டது. தலைசிறந்த சிற்பக்கலையழகு வாய்ந்த அற்புதமான
திருக்கோயில். தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருந்து வருகின்றது.
வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை
தேவஸ்தானத்திற்குச் சொந்தமான திருக்கோயில். கோயில் வழிபாடு நிர்வாகம்
அரண்மனை தேவஸ்தானத்தின் மூலம் நடைபெறுகிறது. கோயில்
கலைப்பராமரிப்பு தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாள்தோறும் எண்ணற்றோர் வந்து கண்டு மகிழ்கின்றனர். இத்திருக்கோயிலால்
தஞ்சை, சுற்றுலாத் துறையில் தனியிடம் வகிக்கிறது.

     இக்கோயிலைக் கட்டியவன் முதலாம் இராசராசசோழன். இவன்
சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன்.
ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன். இயற்பெயர் அருண்மொழித் தேவன்.
பட்டப்பெயர் இராசகேசரி. தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று
பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச் சோழன் முதலிய வேறு
பெயர்களையுடையவன். இம் மன்னன் கி.பி.1010ஆம் ஆண்டில் இக்கோயிலைக்
கட்டி முடித்திருக்க வேண்டும் என்பர் ஆய்வாளர். இவனுடைய காலம்
சோழர் வரலாற்றில் வெற்றிக் காலம். மாலத்தீவுகளையும் வென்ற இவனுடைய
வெற்றியிலிருந்து இவனுடைய கப்பற்படை வலிமையும் புகழப்படுகிறது.